செய்திகள்

அமைச்சர்களின் ஊழலால் பஸ் கட்டணம் உயர்வு: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

Published On 2018-01-22 10:39 GMT   |   Update On 2018-01-22 10:39 GMT
அமைச்சர்களின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடே பஸ் கட்டண உயர்வுக்கு காரணம் என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் நடந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு அர்ஜுன் சம்பத் இன்று மாட்டுவண்டியில் வந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் சைக்கிளில் வந்தனர்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள பஸ் கட்டணம் உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைச்சர்கள் இதனை நியாயப்படுத்த மட்டுமே பார்க்கின்றனர். தங்களது ஊழலையும் நிர்வாக சீர்கேட்டில் ஏற்பட்டுள்ள முறைகேட்டையும் தீர்க்க என்ன வழி என கண்டுபிடிக்க தவறிவிட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கும் ஜி.எஸ்.டி.வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்தால் பெரும்பாலான பொருட்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

ரஜினிகாந்த் தொடங்க உள்ள ஆன்மீக அரசியலுக்கு நாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளோம். கமல் தனது அரசியல் பயணத்தை அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து தொடங்குவதாக அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது.

அப்துல்கலாம் மிக சிறந்த ஆராய்ச்சியாளர். மீத்தேன் திட்டம், கூடங்குளம் அணுஉலை போன்ற திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் அப்துல்கலாம். உயிரோடு இருந்தவரை அவரது நடவடிக்கைக்கு எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து விட்டு தற்போது அவரது பெயரை வைத்து அரசியல் செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் பத்மாவத் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளனர். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் பற்றி படம் எடுத்தால் அந்த சர்ச்சையை விளக்குவதற்காக அவர்களிடம் படம் திரையிடப்பட்டு காட்டப்படுகிறது. அதேபோல் பத்மாவத் திரைப்படத்தையும் தமிழகத்தில் திரையிடுவதற்கு முன்பாக எங்களிடம் காட்ட வேண்டும். தமிழகத்திலேயே ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்தி தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் உலகம்பட்டியில் கிறிஸ்தவ தேவாலயம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்துவது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் இந்து கோவில்கள் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இவ்விழா நடத்தப்படுகிறது.

ஆனால் திண்டுக்கல்லில் இந்தமுறை பின்பற்றப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
Tags:    

Similar News