செய்திகள்
டாக்டர் மனோஜ்குமார்

பெரியகுளத்தைச் சேர்ந்த டாக்டர் - மாணவியை மெஸ்மெரிசம் செய்து கடத்திய நித்யானந்தா சீடர்கள்

Published On 2018-01-22 06:12 GMT   |   Update On 2018-01-22 06:12 GMT
பெரியகுளத்தைச் சேர்ந்த டாக்டர், மாணவியை நித்யானந்தாவின் சீடர்கள் மெஸ்மெரிசம் செய்து கடத்தி விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடி தெருவைச் சேர்ந்தவர் காந்தி (வயது 61). இவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னீஷியனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் மனோஜ்குமார் (30). மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

மனோஜ்குமார் அவரது சகோதரி வனிதா, அவரது மகள் நிவேதா ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நித்யானந்தா நடத்திய தியானப்பயிற்சியில் கலந்து கொள்ள மதுரைக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.

வனிதாவின் மகள் நிவேதா பிளஸ்-2 படித்து வந்தார். எனவே தனது மகளை தியானப்பயிற்சிக்கு தொடர்ந்து அனுப்ப வனிதா விரும்பவில்லை. ஆனால் திருவண்ணாமலைக்கு சிறப்பு தியானப்பயிற்சிக்கு கலந்து கொள்ளுமாறு அவர்களை நித்யானந்தா சீடர்கள் அழைத்துச் சென்றனர்.

தற்போது மனோஜ்குமாரையும், நிவேதாவையும் மெஸ்மெரிசம் செய்து நித்யானந்தாவின் சீடர்கள் கடத்தி வைத்திருப்பதாக பெரியகுளம் டி.எஸ்.பி. வினோஜியிடம் காந்தி புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் எனது மகன் மனோஜ்குமார் எப்போதும் என்னிடம் மரியாதையாக பேசுவான். கடந்த சில நாட்களுக்கு முன்பு போனில் பேசியபோது நீ, வா, போ என்று பேசினான். அவனது பேச்சில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தியானப்பயிற்சி என்ற பெயரில் மனோஜ்குமாரையும், எனது பேத்தி நிவேதாவையும் நித்யானந்தாவின் சீடர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே அவர்களை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து டி.எஸ்.பி. வினோஜி தெரிவிக்கையில், திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தியுள்ளோம். காந்தியின் கூற்றுப்படி அவர்கள் சிறப்பு தியானப்பயிற்சிக்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் உள்ளனர்.

எனவே பிடதி போலீசார் மற்றும் திருவண்ணாமலை போலீசாருடன் சேர்ந்து அவர்களை மீட்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்றார். #tamilnews 

Tags:    

Similar News