செய்திகள்

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: ஓடும் பஸ்சை நடுவழியில் நிறுத்திய பயணிகள்

Published On 2018-01-21 13:01 GMT   |   Update On 2018-01-21 13:01 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓடும் பஸ்சை நடுவழியில் பயணிகள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை:

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து, நேற்று முதல் அது உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் பல இடங்களில் பஸ்களில் பயணம் செய்த மக்கள் கண்டக்டர்களுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி டவுன் பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

பஸ்சில் இருந்த கண்டக்டர் பயணிகளிடம் அரசு புதிதாக அறிவித்த கட்டண உயர்வின் படி டிக்கெட் வசூலித்தார்.

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து குறுக்கு சாலைக்கு செல்ல ஏற்கனவே ரூ.5 வசூலிக்கப்பட்டு வந்தது. நேற்று ரூ.10 வசூலிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கண்டக்டரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறினார்கள். மேலும் டிரைவரிடம் தகராறு செய்து உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே நடுவழியில் பஸ்சை நிறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஆனால் பயணிகள் அதை ஏற்க மறுத்தனர்.

பின்னர் பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டு, பஸ்சை பணிமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து நடந்தே சொந்த ஊருக்கு திரும்பினர்.

மேலும் விருத்தாசலம் செல்ல வேண்டியவர்கள் வேறு பஸ்களில் ஏறி, உயர்த்தப்பட்ட கட்டணத்தை வழங்கி தங்களது பகுதிக்கு சென்றனர். #tamilnews

Tags:    

Similar News