செய்திகள்

கவர்னர் மீது அ.தி.மு.க. உரிமை மீறல்: சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

Published On 2018-01-20 12:59 GMT   |   Update On 2018-01-20 12:59 GMT
எனக்கும், எனது குடும்பத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கவர்னர் தவறான தகவல்களை பரப்பி உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் பாஸ்கர் எம்.எல்.ஏ. புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் குறித்து பல தகவல்களை பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கடந்த 10-ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் பற்றி ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில் பாஸ்கர் எம்.எல்.ஏ. அன்றைய தினம் காலையில் புதிய பி.எம்.டபிள்யூ. காருக்கு பதிவெண் பெற ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்றார்.

அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் கார் கண்ணாடியில் இருந்த கூலிங் ஸ்டிக்கரை அகற்றும்படி தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஸ்கர் எம்.எல்.ஏ. 10 குண்டர்களுடன் வந்து ஊழியர்களை மிரட்டி பதிவெண் பெற்று சென்றார்.

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். இதுபோல ஒரு சம்பவமே நடைபெறவில்லை என பாஸ்கர் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்திருந்தார். தன்னிடம் பி.எம்.டபிள்யூ. காரே இல்லை, அதற்கு பதிவெண் பெற செல்லவில்லை. பழைய காரின் நம்பர் பிளேட் சேதமடைந்ததால் அதை மாற்றி புதிதாக நம்பர் பிளேட் பெற்றதாகவும், அப்போது எந்த தகராறும் நடைபெறவில்லை என்றும் கூறினார்.

மேலும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கவர்னர் தவறான தகவல்களை பரப்பி உள்ளார். இது உரிமை மீறிய செயலாகும். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் பாஸ்கர் எம்.எல்.ஏ. புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்ற சபாநாயகர், இப்படியொரு சம்பவம் நடந்ததா? இல்லையா? என போக்குவரத்துத்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி 19-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த கடிதத்திற்கு துறை செயலரின் ஒப்புதலோடு போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் பதில் அனுப்பி உள்ளார். அந்த பதிலில், இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த கடிதம் நேற்றைய தினம் சபாநாயகருக்கு வந்தது. இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட சபாநாயகர் பாஸ்கர் எம்.எல்.ஏ. அளித்த புகார் உண்மையானது. உரிமை மீறலுக்கு தகுதியானது என முடிவெடுத்துள்ளார்.

அதேநேரத்தில் கவர்னருக்கு உரிமை மீறல் குழு சம்மன் அனுப்ப முடியுமா? அதற்கான சட்ட வழிகள் உள்ளதா? என ஆராய்ந்து வருகிறார். இதற்காக சட்டத்துறை செயலர், சட்ட நிபுணர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநில கவர்னருக்கு அதிகாரம் குறைவு, ஆனால் சட்ட பாதுகாப்பு அதிகம். யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு அதிகாரம் அதிகம். ஆனால் சட்ட பாதுகாப்பு குறைவு என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஓரிரு நாளில் உரிமை மீறல் குழு கூடி முடிவு செய்யும் என தெரிகிறது. #tamilnews

Tags:    

Similar News