செய்திகள்

வத்தலக்குண்டு அருகே மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த மாலத்தீவு மாப்பிள்ளை

Published On 2018-01-20 10:48 GMT   |   Update On 2018-01-20 10:48 GMT
வத்தலக்குண்டு அருகே திருமண நாளில் மணப்பெண்ணுடன் மாட்டு வண்டியில் மாலத் தீவு மாப்பிள்ளை ஊர்வலமாக வந்தார்.

வத்தலக்குண்டு:

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றிய பொன்னையா மகன் சங்கர் கணேஷ். இவர் மாலத்தீவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கலைச்செல்வி என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் சங்கர் கணேசின் சொந்த ஊரான வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோவிலில் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாட்டு வண்டியில் திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

சங்கர் கணேஷ் தனது பெரும்பாலான நாட்களை வெளிநாட்டிலேயே கழித்து விட்டதால் தனது சொந்த ஊரில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய விரும்பியதால் இந்த மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தப்பட்டதாக அவரது பெற்றோர்கள் கூறினர்.

மணமக்கள் 2 கி.மீ தூரம் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் வந்தனர். வரவேற்பு மேடையில் திருவள்ளுவர், பாரதியார் அம்பேத்கார், காமராஜர், அப்துல்கலாம் ஆகிய தலைவர்களின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இது குறித்து மணமகனின் தந்தை பொன்னையா கூறுகையில், நம் நாட்டின் அடிப்படை ஆதாரமே விவசாயம்தான். அதனை ஒருபோதும் நாம் மறக்க கூடாது என்பதற்காகவே இந்தமாட்டு வண்டி பயணம் ஏற்பாடு செய்தோம். விவசாயத்துக்கு தேவை மழை என்பதால் அதனை ஊக்குவிக்கும் வகையில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மணமகன் சங்கர் கணேஷ் தெரிவிக்கையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாலும் இனிமேல் தமிழகத்திலேயே தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளேன். எனது திருமண நாளில் நடந்த இந்த பாரம்பரிய நடைமுறை மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்தார். #tamilnews

Tags:    

Similar News