search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vathalagundu"

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை என்பதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. #PlasticBan
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெருமளவில் குறைந்தது. சிறுவியாபாரிகளும் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தினர்.

    ஆனால் அதன்பின்னர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை. இதனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

    சுற்றுலா இடங்களுக்கு செல்ல வத்தலக்குண்டு முக்கிய சந்திப்பு என்பதால் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவது இல்லை. ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு குறைந்ததால் வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவியத்தொடங்கியுள்ளன. பெரும்பாலான தெருக்களில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது.

    எனவே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ரோந்து பணியை மீண்டும் தீவிரப்படுத்தி பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுவியாபாரிகளை குறிவைக்காமல் மொத்தமாக தயாரிக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #PlasticBan

    மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது லாரி மோதியதில் மதுராந்தகத்தை சேர்ந்த அக்கா-தம்பி பலியாகினர்.
    வத்தலக்குண்டு:

    சென்னையை அடுத்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப் (வயது 21). இவர், அங்குள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23). இவர்கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி 4 பேரும், 2 மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்ட, பின்னால் கவுசல்யா அமர்ந்திருந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளை மெர்வின் ஓட்ட தோழி கயல்விழி உடன் சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக பிரதாப் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரதாப்பும், கவுசல்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மெர்வின், கயல்விழி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிளைச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் இருளையா, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அனைத்து பகுதி மக்களுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    மோட்டார் இன்றி இயங்காமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் பொருத்தி இயக்க வேண்டும். பழுதடைந்த சிறு மின் விசை பம்புகளை சரி செய்ய வேண்டும்.

    சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இந்த போராட்டத்தில் மாவட்ட குழு செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு குணசேகரன், ஒன்றிய குழு செயலாளர் கலைச் செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், தண்டபாணி, பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டுவில் பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.20ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள மேலக்கோவில் பட்டியை சேர்ந்தவர் கண்ணன். கூலிதொழிலாளி. இவரது மனைவி சசிகலா(25). நேற்று மாலை மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். பணம் எடுப்பது குறித்த தகவல் சரிவர தெரியாததால் அருகில் இருந்த ஒரு வாலிபரிடம் தனது அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது என பார்க்குமாறு கூறியுள்ளார்.

    கார்டை வாங்கிய அந்த வாலிபர் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி சென்றுவிட்டார். அவர் சென்றபிறகு ரூ.20ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தனது செல்போன் எண்ணுக்கு வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணத்தை எடுத்தது தேனி மாவட்டம் டி.வாடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கனகராஜ்(30) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வத்தலக்குண்டு அருகே மாமியார் கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாமியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்தவர் அழகேஸ்வரி(24). இவருக்கும் ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த சத்யராஜ்(30) என்பவருக்கும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு இனியா(2) என்ற மகள் உள்ளார். அழகேஸ்வரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சத்யராஜ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 2 வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனிடையே மாமியார் வீட்டில் தங்கியிருந்த அழகேஸ்வரியை அவர் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சத்யராஜிடம் இதுகுறித்து அழகேஸ்வரி கூறினார். ஆனால் அவர் தாயை கண்டிக்காமல் விட்டுவிட்டார். இதனால் மனமுடைந்த அழகேஸ்வரி வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாமியார் பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டுவில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு காந்திநகர் வடக்கு கணவாய்பட்டி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கல்யாணி. இவர்களது மகள் சுவேதா, தர்சினி. நேற்று காலை வழக்கம் போல் முருகன் பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கல்யாணி தனது மகள்களுடன் வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் ஊற்றுவதற்கு சென்று விட்டனர். மாலை வரை கோவிலில் அவர்கள் இருந்து விட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர். பின்னர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்த அவர்கள் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    மாலை நேரம் முருகன் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பதறி போன முருகன் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அதிர்ச்சியுடன் வீட்டுக்கு விரைந்தனர்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் முருகன் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ×