செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

Published On 2018-01-19 08:51 GMT   |   Update On 2018-01-19 08:51 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து விற்பதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் 01.12.2017 அன்று பெட்ரோல் விலை ரூ. 67.71 எனவும், 02.12.2017 அன்று ரூ. 67.78 எனவும், 03.12.2017 அன்று ரூ. 68.02 எனவும் நாள் தோறும் உயர்ந்து 30.12.2017 அன்று ரூ. 71.62 எனவும், 31.12.2017 அன்று ரூ. 71.66 எனவும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தேதியான 01.01.2018 அன்று பெட்ரோல் விலை ரூ. 71.78 எனவும், 02.01.2018 ரூ. 71.95 எனவும் உயர்ந்து 15.01.2018 அன்று ரூ. 74.20 எனவும், இன்று 19.01.2018 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 74.35 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 65.83 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்து, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க மாநில அரசு முன்வர வேண்டும்.

இதன் மூலம் பொது மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒரு நிலைத்த தன்மையோடு, குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முன்வந்து சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற வழி வகைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News