செய்திகள்

33 யானைகள் பங்கேற்ற யானைகள் நல வாழ்வு முகாம் தொடங்கியது

Published On 2018-01-04 10:52 GMT   |   Update On 2018-01-04 10:52 GMT
மேட்டுப்பாளையத்தில் 33 யானைகள் பங்கேற்ற நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. முகாமை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேட்டுப்பாளையம்:

தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான நல வாழ்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம் கடந்த 2003-ம் ஆண்டு முதுமலை தெப்பக்காட்டில் அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் நடைபெற்று வருகிறது. தற்போது 10-வது ஆண்டு முகாம் இன்று (வியாழக்கிழமை)தொடங்கியது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 33 யானைகள் கலந்து கொண்டது.

முகாமை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அவர்கள் யானைகளுக்கு வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு, வெல்லம், அண்ணாச்சி பழம், சாத்துக்குடி உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.

இதற்காக முகாமிற்கு வந்த யானைகள் இன்றுகாலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ‌ஷவரில் குளிக்க வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

முகாம் தொடக்க விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கலெக்டர் ஹரிஹரன், தலைமையிடத்து இணை ஆணையர் ஹரிபிரியா, இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ராமு, புலவர் சவுந்திர ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கிய யானைகள் நல வாழ்வு முகாம் பிப்ரவரி மாதம் 20-ந் தேதி வரை மொத்தம் 48 நாட்கள் நடைபெற உள்ளது.

நல வாழ்வு முகாமில் உள்ள யானைகள் குளிக்க ‌ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது. காலை மற்றும் மாலை வேலைகளில் தினமும் இரு முறை யானைகள் நீர் தெளிப்பான் மூலம் குளிக்க வைக்கிறார்கள்.

மேலும் காலை, மாலை இருவேளையும் யானைகளுக்கு நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. கால்நடை டாக்டர்களின் அறிவுரைப்படி ஒரு யானைக்கு தினமும் 150 முதல் 200 கிலோ வரை உணவு வழங்கப்பட உள்ளது.

கூத்தப்பனை, தென்னை ஓலை, சோளத்தட்டை, கீரை, கொள்ளு வகைகள் உணவாக வழங்கப்படும். அரிசி, கொள்ளு, கேழ்வரகு, பாசிப்பயிறும் வழங்கப்படுகிறது.

மேலும் பசுந் தீவனங்கள், பழங்கள்,அஷ்ட சூரணம், பயோ பூஸ்ட், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.

முகாமில் கலந்து கொள்ள இயலாத யானைகளுக்கு அந்தந்த இடத்திலே முகாமில் வழங்கப்படுவது போன்று உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முகாமிற்கான செலவு தொகையானரூ. 1 கோடியே, 50 லட்சத்து 79 ஆயிரம் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 


Tags:    

Similar News