செய்திகள்

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும்: வசந்தகுமார் எம்.எல்.ஏ.

Published On 2017-12-23 05:12 GMT   |   Update On 2017-12-23 05:12 GMT
தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று பெரம்பலூரில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
பெரம்பலூர்:

காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ., பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது :-

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரும் ஆளும் கட்சியை எதிர்க்கும் டி.டி.வி.தினகரன் தரப்பினரும் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இருப்பினும் மக்கள் தி.மு.க.விற்கு தான் ஓட்டு போட்டுள்ளனர். இந்த தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது எழுதப்படாத சட்டமாகும். இதில் ஒரு போதும் எந்த மாற்றமும் வராது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகத்தான் பிரதமர் மோடி சந்தித்தார். அவர்களின் சந்திப்புக்கும் 2ஜி வழக்கு தீர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணி தொடரும். 2021ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தி.மு.க. அமைச்சரவையில் நாங்கள் இடம் பெறுவோம். இதைத்தொடர்ந்து 2026-ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News