செய்திகள்

ஆசிரியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: திருநாவுக்கரசர்

Published On 2017-12-18 08:08 GMT   |   Update On 2017-12-18 08:09 GMT
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 7 -வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணைப்படி அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்றும், அவைகளை சரி செய்து உடனடியாக அமல்படுத்த அரசு ஆணை வழங்க வேண்டுமென்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக 1.1.2016 முதல் பணப்பயனுடன் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 1.10.2017 முதல் தான் வழங்கப்படும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.1.2016 முதல் 1.10.2017 வரை இடையிலுள்ள சுமார் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டு மென்ற நீண்டநாள் கோரிக்கையையும் அமல்படுத்த ஆணை பிறப்பிக்கவில்லை. இதன்மூலம் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு மிகப் பெரிய துரோகத்தைச் செய்துள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றக்கோரி ஆசிரியர் அமைப்புகள் டிசம்பர் 20 -ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டமும், ஜனவரி 6 -ந்தேதி மாநிலம் தழுவிய உண்ணா விரதப் போராட்டமும் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அரசு உடனடியாக அழைத்துப்பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News