செய்திகள்

தொழிலாளர்கள் போராட்டம்: அரசு பஸ்கள் குறைந்த அளவில் ஓடின

Published On 2017-12-15 10:35 GMT   |   Update On 2017-12-15 10:36 GMT
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை:

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 13-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

தி.மு.க. மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று மாலைவரை நடை பெறுகிறது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பஸ் டெப்போக்களிலும் ஊழியர்கள் குறைந்த அளவிலேயே இன்று பணிக்கு வந்தார்கள்.

இதனால் படங்களை முழுமையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பணிக்கு வந்திருந்த ஊழியர்களை கொண்டு பஸ்களை இயக்கப்பட்டது. 3400 மாநகர பஸ்களில் 60 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டன. மிதமுள்ள பஸ்கள் டெப்போக்களில் முடங்கி விடந்தன.

இதன் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் மாநகர பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. வழக்கமாக செல்லக் கூடிய பஸ்கள் வராததால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பஸ் நிலையங்களிலும், நிறுத்தங்களிலும் காத்து நின்ற பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பிராட்வே, கோயம்பேடு, தி.நகர், தாம்பரம், பெரம்பூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லக் கூடியவர்க்ள, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை நகரில் பஸ் சேவை முக்கிய பங்கு வகிப்பதால் திடீரென பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஷேர் ஆட் டோக்களிலும், நடந்தும் சென்றார்கள். தொடர்ச்சியாக பஸ் சேவை இல்லாததால் பஸ் நிலையங்களிலும் கூட்டம் மிகுதியாக இருந்தது.

பூந்தமல்லியில் வழக்கமாக 160 மாநகர பஸ்கள் இயக்கப்படும். இன்று 80 பஸ்கள் இயக்கப்பட்டன. குன்றத்தூர் டெப்போவில் உள்ள 28 பஸ்களில் 15 பஸ்கள் மட்டுமே ஓடின.

Tags:    

Similar News