செய்திகள்
பஸ்கள் ஓடாததால் ஒரே மோட்டார்சைக்கிளில் 4 மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றவரை படத்தில் காணலாம்

குமரியில் பஸ்கள் ஓடாததால் மாணவ-மாணவிகள், பெண்கள் கடும் அவதி

Published On 2017-12-15 07:24 GMT   |   Update On 2017-12-15 07:25 GMT
குமரியில் முழு அடைப்பு போராட்டத்தால் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
ஒக்கி புயலால் பலியான விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கேட்டு இன்று குமரி மாவட்டத்தில் நடந்த கடை அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக இன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்படும் என்று மாணவ, மாணவிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அரையாண்டு தேர்வு காரணமாக குமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்துள்ளார். இதனால் குமரி மாவட்டத்தில் திட்ட மிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெற்றது.

பஸ்கள் ஓடாததால் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ, மாணவிகள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர்களை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.

அதேசமயம் ஒருசில பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

மேலும் ஆட்டோக்களுக்கு இன்று கடும் கிராக்கி ஏற்பட்டது. பள்ளிக்கூடங்களுக்கு செல்பவர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என்று பலரும் ஆட்டோக்களை தேடி ஓடியதையும் காணமுடிந்தது. இதனால் சில ஆட்டோக்களில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.

குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தினமும் நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். பஸ் போக்குவரத்து நடைபெறாததால் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். பெண்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டுதுரை உத்தரவின் பேரில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலைய பகுதிகளில் போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News