செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் தனியார் பள்ளி பஸ்சில் பெட்டி பெட்டியாக குக்கர்கள்

Published On 2017-12-14 05:36 GMT   |   Update On 2017-12-14 05:36 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி பேருந்தில் பெட்டி பெட்டியாக குக்கர்கள் இருப்பதை மத்திய போலீசார் கண்டு பிடித்தனர்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைசாவடியில் மத்திய ரிசர்வ் போலீசார் தனியார் பள்ளிக்கூட பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது பஸ்சில் பெட்டி பெட்டியாக குக்கர்கள், டிபன்பாக்ஸ் ஆகியவை ஏராளமாக இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே போலீசார் பஸ் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அது கிறிஸ்தவ பள்ளிக்கூட பஸ் என்பதால் பள்ளி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.

அப்போது கிறிஸ்துமஸ் விழாவுக்காக பள்ளி ஆசிரியைகளுக்கு பரிசு கொடுப்பதற்காக குக்கர் வாங்கி வருவதாகவும் அதற்கான பில் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

எந்த கடையில் யார் மூலம் வாங்கி வரப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தனர். அதனை போலீசார் சரிபார்த்து உறுதிப்படுத்தினர்.

அரசியல் கட்சியினர் யாரும் புகார் கூறாததால் அந்த பஸ் விடுவிக்கப்பட்டது.

காசிமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் ஒரு வேனில் கொண்டு செல்லப்பட்ட 500 குக்கர்கள் பிடிபட்டது. அதுவும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு பரிசு கொடுக்க கொண்டு செல்லப்படுவதை உறுதிபடுத்தியதால் போலீசார் அந்த வாகனத்தையும் விடுவித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால் குக்கர் ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு பில் இருந்தால் மட்டுமே அதை விடுவிக்கின்றனர்.
Tags:    

Similar News