செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 17-ந்தேதி மீண்டும் தண்ணீர் திறப்பு

Published On 2017-12-14 03:31 GMT   |   Update On 2017-12-14 03:31 GMT
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக வருகிற 17-ந்தேதி முதல் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக கடந்த மாதம் 17-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 30-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கால்வாய் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறப்பு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கால்வாய் பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக கடந்த 2-ந்தேதியுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் அரசு உத்தரவின்படி நேற்று மீண்டும் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கனமழை காரணமாக தற்போது தண்ணீர் தேவை ஏற்படவில்லை என்றும், இதனால் கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,576 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Tags:    

Similar News