search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water"

    • அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.
    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    சென்னையில் தினமும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 700 நடைகள் (டிரிப்) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 நடைகளாக உயர்ந்து உள்ளது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியாத பகுதிகளில் டயல் செய்து ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி இருப்பதால் ஏராளமானவர்கள் இதன் வழியாக குடிநீருக்கு பதிவு செய்கின்றனர். பணம் செலுத்தி குடிநீர் பெறுவோர் பயன்பாடு கூடியுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.

    மேலும், மார்ச் மாதத்தில் தெருக்களில் உள்ள தொட்டிகளை நிரப்ப 61 ஆயிரம் நடைகள் பயன்படுத்தப்பட்டன. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லாரி டிரிப்புகள் 24,800 ஆக அதிகரித்துள்ளது.

    இதே போல டயல் குடிநீர் தேவை 30 ஆயிரம் நடைகளை உயர்ந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு லாரிகளின் டிரிப்புகளை அதிகரித்துள்ளது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    டேங்கர் லாரிகளின் பயணங்களை அதிகரிப்ப தன் மூலம் தனியார் தண்ணீர் டேங்கர் சப்ளையர்களின் ஆதிக்கத்தை மறைமுகமாக குறைத்து வருகிறோம்.

    புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பி உள்ளனர். அவர்களுக்கும் 'டயல்' குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
    • 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது.

    கோவை:

    குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்தது. ஆறுகள், நீரோடைகள், சிறு ஆறுகள் உள்ளிட்டவையும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் 2-வது நாளாக மழை நீடித்தது.

    குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் தேங்கியும் நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை இன்று காலை ஊழியர்கள் அகற்றினர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இந்த கோடைமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது.

    கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பில்லூர் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்துவிட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வர தொடங்கியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் 2 மாதங்களுக்கு பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
    • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-

    சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.

    பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    • கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.
    • விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குண்டுப்பட்டி கிராமத்தில் 17 குடியிருப்பு வீடுகள் உள்ளன.

    இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கிராமத்தின் மையப்பகுதியில் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று ராஜா (வயது55) என்பவர் அதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகே கட்டி வரும் புதிய குடியிருப்பு வீட்டிற்கு பைப் மூலம் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை அருகே குடியிருக்கும் கவுஸ்பீ என்பவர், தட்டி கேட்டார்.

    இதைத்தொடர்ந்து ராஜா கட்டிடத்திற்கு எடுத்து சென்ற குடிநீர் பைப் லைனை அகற்றியுள்ளார். இதனால் ராஜாவுக்கும், கவுஸ்பீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பேச்சுவார்த்தை முற்றிவிட, கவுஸ்பீயின் மருமகள் பாத்திமா (30) வீட்டிலிருந்து வெளியே வந்து ராஜாவை திட்டியுள்ளார். அப்போது கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.

    அப்போது அவர் ராஜவையும் அவரது மகன்கள் மணி (25), பிரபு (23) ஆகியோரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜாவின் மகன் மணி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வந்து விக்னேஷை தாக்க முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனை விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால், குடிநீர் பிடிப்பதில் தகராறு பிரச்சனை, மத பிரச்சனையாக மாறியதாக புரளி கிளம்பியது. மேலும், இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், மணி, பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பழனிசாமி மற்றும் வெண்ணிலா ஆகியோரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கைதான கவுஸ்பீ கூறியதாவது:- எங்களுக்குள் குடிநீர் பிடிப்பதில் தான் தகராறு ஏற்பட்டது. மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியானது அனைத்தும் புரளி என்று தெரிவித்தார்.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது.
    • குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது.

    அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 6-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில நாடகளாக கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் குடிநீர் வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் அடைப்பை சரிசெய்தனர். பின்னர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மெட்ரோ வாட்டர் தண்ணீரை பயன்படுத்தும் படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அப்பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, கழிவுநீர் அடைப்பை சரிபார்த்த பிறகு குழாய்களில் வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்யச் சொன்னார்கள். நாங்கள் அதை சுத்தம் செய்து எங்கள் தொட்டியின் வால்வை மூடிவிட்டோம். ஆனால் குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது. இதனால் சிலர் லாரிகளில் முன்பதிவு செய்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் போது பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து தினமும் லாரி தண்ணீரை முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவது முதல் முறையல்ல. இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு, நவம்பர் மாதங்களிலும் தண்ணீர் மிகவும் மோசமாக வந்தது என்றார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, அந்த பகுதியில் இருந்த கழிவுநீர் அடைப்பு சரிசெய்யப்பட்டது. தண்ணீர் மாசு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.

    தண்ணீர் மாசு காரணமாக அப்பகுதியில் சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது.
    • இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் சிந்து ஊர் என்ற இடத்தில் நேற்று ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அடர்ந்த வனப்பகுதியில் கருப்பு நிறத்தில் இருந்த மரத்தைக் கண்ட வன அலுவலர் நரேந்திரன் தனது ஊழியர்களிடம் மொட்டு போல் உள்ள இடத்தில் கத்தியால் வெட்ட கூறினார்.

    வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

    மரம் தனது தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்றும் முதலையின் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா என தெரிவித்தார்.

    தண்ணீரை சுவைத்து பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல எனவும் கூறினார். 

    • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
    • வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    நீர் இன்றி அமையாது உலகு..என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

    இன்று 'உலக தண்ணீர் தினம்'

    உயிர்களின் அடிப்படை தேவையாக தண்ணீர் அமைந்து உள்ளது.உணவு தயாரிப்பது, குளிப்பது, குடிப்பது மற்றும் விவசாய உற்பத்தி, தொழிற்சாலை உற்பத்தி என மனிதனின் அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறதுஒரு நபருக்கு தினமும்  80 லிட்டர் தண்ணீர் சராசரியாக தேவைப்படுகிறது.

    மக்கள் தொகை பெருக்கம்,தொழிற்சாலைகள் அதிகரிப்பு,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.உலகில் பல நாடுகளில் பல லட்சம் மக்கள் சுகாதாரமான குடிநீர், தண்ணீர் இல்லாமல் உள்ளனர்.




    பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையும் 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீரும் உள்ளது.டெல்லி, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உளிட்ட பல்வேறு நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    பருவநிலை மாற்றம், மழைப் பொழிவு குறைவு மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.




    1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா சபை மாநாட்டில் ' உலக தண்ணீர் தினம்' முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 - ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த. தினத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.

    தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்...நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    • பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் காமராஜர் நகர் பெரியாம்பட்டி, புல்லுக்குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசி கொல்லன் கொட்டாய், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் புள்ளுக்குறிச்சி, காமராஜர்நகர், பெரியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாதத்திற்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இது மட்டும் இல்லாமல் உள்ளூரில் வழங்கப்படும் உப்பு தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை.

    பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து ஊராட்சி , மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறியிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை .

    இதனால் குடிநீர் இன்றி அவதி அடைந்து வந்த காமராஜர் நகர் ,புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் காலி குடும்பங்களுடன் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் இன்று காலை குடிநீர் கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர் .

    சாலை மறியல் ஈடுபட்டு வந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் உதயசங்கர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்
    • பறவைகள் தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் சிறு தண்ணீர் தொட்டியும் விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்

    அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் செயல் தலைவர் ஆர்.ஏ. ராஜ், அமைப்பாளர்ஜி.ஹரிராஜ் ஆகியோர் விடுத்து உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு உங்கள் பகுதியில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்கும்படியும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    அதே போல பறவைகளினுடைய தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் சிறு தண்ணீர் தொட்டியும் விலங்குகளுக்கும் தாகம் தீர்ப்பதற்காக ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றையும் அமைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

    தண்ணீர் பந்தல்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் உரிய அனுமதி பெற்றும் அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
    • காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதன் காரணமாக வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்து வருகின்றன.

    எனவே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப்ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அங்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அங்கு தினந்தோறும் தண்ணீரை நிரப்பும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வன நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதும் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
    • இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இம்முறை காவிரியில் இருந்து போதிய நீர் இல்லாததால் குறுவை சாகுபடி மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதேபோல் தண்ணீர் இல்லாத காரணத்தால் சம்பா, தாளடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தி, மேலத் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாததால், அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

    ஆனால், கடந்த 4 மாதங்களாக காவிரி நீர் வரத்து இல்லாததாலும், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததாலும் மோட்டார் பம்ப்செட்டுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால், ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடப்பட்டதே தவிர, தஞ்சாவூர் மாவட்டத்துக்குக் விடவில்லை. இதனால், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலையுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்பகுதிகளில் கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல், நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்துவிட்டன. இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் ஆடுகளை விட்டு மேய்த்தனர்.

    இது குறித்து மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:

    மேலத் திருப்பூந்துருத்தி கூடுதல் வருவாய் கிராமத்தில் ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த பல ஏக்கரில் அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் சம்பா சாகுபடி செய்து வந்தோம். பம்ப்செட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பல ஏக்கரில் நிலங்களில் தண்ணீரின்றி காய்ந்து, வெடிப்பு ஏற்பட்டு பயிர்களும் கருகி வருகின்றன. இதனால், வேறு வழியின்றி ஆடுகளை விட்டு பயிர்களை அழித்து வருகிறோம். இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    அருகிலுள்ள கருப்பூர், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    ×