செய்திகள்

சொத்தை விற்று ஜாமீனில் எடுத்து மனைவியின் கொலைக்கு நானே காரணமாகி விட்டேன்: தஷ்வந்தின் தந்தை

Published On 2017-12-08 04:32 GMT   |   Update On 2017-12-08 04:33 GMT
எனது சொத்தை எல்லாம் விற்று மகனை ஜாமீனில் எடுத்து, எனது மனைவியின் கொலைக்கு நானே காரணமாகி விட்டேன் என தஷ்வந்திந்தின் தந்தை கூறியுள்ளார்.
விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட தஷ்வந்தின் தந்தை சேகர், தற்போது போலீஸ் நிலையத்தில்தான் உள்ளார். மும்பையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதை கேட்டு கதறி அழுத அவர், கூறியதாவது:-

நான் பெரிய தப்பு செய்து விட்டேன். நானும், எனது மனைவியும் எங்களது சொத்தை எல்லாம் விற்று தஷ்வந்தை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தோம். ஆனால் போதை சுகத்துக்காக எனது மனைவியை கொலை செய்து விட்டான்.

அவனுக்கு அதிக தண்டனை கிடைக்க வேண்டும். தஷ்வந்தை வெளியே கொண்டு வராமல் சிறையிலேயே வைத்து இருந்தால் இந்த நேரம் எனது மனைவி உயிருடன் இருந்து இருப்பாள்.

நானே எனது மகனை 2-வது கொலைக்கு தூண்டுகோலாக மாறி விட்டேன். எனது சொத்தை எல்லாம் விற்று அவனை ஜாமீனில் எடுத்து, எனது மனைவி கொலைக்கும் நானே காரணமாகி விட்டேன். இதுபோன்ற சம்பவம் வேறு எந்த குடும்பத்துக்கும், எந்த தகப்பனுக்கும் நடக்க கூடாது. இனி அவன், என் மகன் இல்லை.

இவ்வாறு சேகர் அழுது புலம்பி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பெற்ற பிள்ளையே மனைவியை கொலை செய்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் சேகர், விபரீத முடிவு எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்காமல் போலீஸ் நிலையத்திலேயே வைத்து விசாரித்து வருகிறோம். அவர் தவறான முடிவை எடுக்காமல் இருக்க அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டதற்கு பிறகு அவளது பெற்றோர் என்ன வேதனையை அடைந்தார்களோ, அதற்கும் மேலான வேதனை தற்போது சேகருக்கு ஏற்பட்டு உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News