செய்திகள்

டி.டி.வி.தினகரன் இன்று கோவை வருகை: 9 மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்

Published On 2017-11-23 03:58 GMT   |   Update On 2017-11-23 03:58 GMT
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே டி.டி.வி.தினகரன் இன்று இன்று இரவு கோவை வருகிறார். கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு உள்ளிட்ட 9 மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கோவை:

அ.தி.மு.க. அம்மா அணி வளர்ச்சி பணிகள் குறித்து துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மண்டல வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அதன்படி கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் மற்றும் கரூர், நீலகிரி ஆகிய 9 மாவட்ட நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்காக அரியலூரில் இருந்து கார் மூலம் இன்று இரவு கோவை வருகிறார். அவருக்கு அம்மா அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் காளப்பட்டியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை திருப்பூர் சென்று நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மதியம் கோவை திரும்பும் அவர் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலையில் சூலூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் கோவை திரும்பி ஓட்டலில் தங்குகிறார்.

நாளை மறுநாள்(சனிக்கிழமை) காரமடை, பேரூர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்ப உள்ளார்.

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, வருமான வரித்துறை அளித்த சம்மனின் பேரில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த முக்கியமானவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரண்டையும் அ.தி.மு.க.வினர் முக்கியமாக எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் திடீரென மண்டல வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பது அவரது அணியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும் அவர் பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என தொண்டர்கள் எதிர் பார்க்கின்றனர்.
Tags:    

Similar News