செய்திகள்

கந்துவட்டி புகார் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-11-23 03:45 GMT   |   Update On 2017-11-23 03:45 GMT
கந்துவட்டி புகார் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.
சென்னை:

சென்னை ஓட்டல் சங்கம், அனைத்து மாவட்ட ஓட்டல் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளின் அவசர கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறும் போது, பொதுமக்கள், தொழிலாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீதமாக வரிவிதிப்பு குறைக்கப்பட்டது. வரி விதிப்பு குறைவின் பலன் முழுவதுமாக நுகர்வோர்களுக்கு சென்றடையவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிச்சயமாக விலை ஏற்றம் செய்யமாட்டோம் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உறுதி அளித்து இருக்கிறார்கள் என்றார்.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதா சுயநினைவு இல்லாத சமயத்தில் தான் கைரேகை பெறப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறாரே?

பதில்:- அவர் சொல்வது சரியா? இல்லையா? என்பதை விசாரணை ஆணையம் தான் முடிவு செய்யும்.

கேள்வி:- போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அவருக்கு திதி கொடுப்பதற்காக செல்ல முயற்சித்தவர்களை அனுமதிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்களே?

பதில்:- ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு புனித கோவிலாக ஒவ்வொரு தொண்டனும் நினைக்கிறான். அந்த திருக்கோவிலை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தான் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி இருக்கும் போது, மூன்றாம் நபர்கள் உள்ளே செல்ல எப்படி அனுமதி கொடுக்க முடியும்?

கேள்வி:- ஜெயலலிதா வழியில் நீங்கள் ரூ.60 கோடி கொள்ளை அடித்து இருப்பதாக, நடிகர் சாருஹாசன் கூறி இருக்கிறாரே?

பதில்:- அரசாங்கம் என்பது ஒரு சமுத்திரம். போபர்ஸ் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இதெல்லாம் இந்தியாவையே தலைகுனிய வைத்த ஊழல்கள். இதை யார் செய்தார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அதைவிட்டுவிட்டு எங்கேயோ கடுகு அளவு தவறு நடந்ததாக சுட்டிக்காட்டினால் அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டாது.

கேள்வி:- கந்து வட்டிக்கு தயாரிப்பாளர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். அதை தடுக்க அரசின் நடவடிக்கை என்ன?

பதில்:- கந்து வட்டி கூடாது. அது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே ஜெயலலிதா அதை ஒழிக்க சட்டத்தை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அநியாய வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறேன் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்க முன்வரவேண்டும். அந்த புகாரின் மீது அரசு கடுமையான நட வடிக்கை எடுக்கும்.

கேள்வி:- கவர்னர் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

பதில்:- அரசியல் அமைப்பு சட்டத்தில் சட்டமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும் என்கிற வரைமுறை தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் உரிய நேரத்தில் கூட்டப்படும். அதுகுறித்து ஸ்டாலினுக்கு கவலை தேவையில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Tags:    

Similar News