செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை கோவிலில் அஷ்டபந்தனம் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டதா? - அதிகாரிகள் விசாரணை

Published On 2017-11-08 10:22 GMT   |   Update On 2017-11-08 10:23 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தனம் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த பிப்ரவரி 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கருவறை லிங்க பீடத்தில் சாற்றப்படட அஷ்ட பந்தனத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்ப கிரகத்தில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் போது மந்திர தகடுகள், பொன், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நவரத்தின கற்கல் அடியில் போடுவார்கள். இதன் மூலம் உலோக சக்தி, மந்திர சக்தி, மனோ சக்தி, யந்திர சக்தி, ஆன்ம சக்தியால் கற்கள் தெய்வத்தன்மை அடைகிறது.

மேலும் ஆற்றலை இந்த விக்கரங்கள் கிரகிக்கும் தன்மை பெறுகிறது. மேலும் சிலை பீடம் தரைப்பகுதியில் இணைக்க கொம்பரக்கு, சுக்கான்தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணை கலவை பயன்படுத்தப்படுகிறது. இவற்றை இடி மருந்து மற்றும் காய்ச்சு மருந்து என்று கூறுவார்கள்.

இடி மருந்தை கல் உரலில் இடிக்காமல் அர உரலில்தான் இடிக்க வேண்டும். அதாவது இந்த கலவையை இடித்து கலந்து மருந்து சாற்றுவார்கள். காய்ச்சியும் மருந்து சாற்றுவார்கள். இவை கான்கீரிட்டை விட பலமடங்கு உறுதியானது.

சில கோவில்களில் பீடத்தையும், உபபீடத்தையும் இணைக்க திரிபந்த மருந்து சாற்றுவார்கள். திரிபந்தனம் என்பது சுக்கான் தூள், சுத்தம் செய்த கரும்பு வெல்லம், முற்றக்கனிந்த பேயன்பழம் ஆகும். இக்கலவையால் பிடிமானம் உறுதியாகும்.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி நடந்தது. அப்போது ஆயிரம் கிலோ அஷ்டபந்தன மருந்து அருணாசலேஸ்வரர், அம்பாள், சம்மந்த விநாயகர், நந்தி, விநாயகர் மற்றும் பரிவார மூர்த்தி சன்னதிகளில் சாத்தப்பட்டது. அதற்கு அடியில் நகைகள் போடப்பட்டுள்ளது.

ஆனால் கும்பாபிஷேகம் முடிந்து சில மாதங்களிலேயே சுவாமி கருவறை லிங்க அடிப்பகுதியில் உள்ள அஷ்டபந்தனத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிவாச்சாரியார்கள் தற்போதைய இணை ஆணையர் ஜெகன்நாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விவரம் இந்து அறநிலையத்துறை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கமி‌ஷனர் ஜெயா உத்தரவின்படி மாநில தலைமை ஸ்தபதி மற்றும் அதிகாரிகள் கோவில் கருவறையை ஆய்வு செய்து அஷ்ட பந்தனத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை ஆய்வு செய்தனர்.

அஷ்டபந்தனம் சாத்தப்பட்ட பின்னர் கருவறை கதவு பூட்டப்பட்டு சாவி இணை ஆணையர் வசம் ஒப்படைக்கப்படும்.

கும்பாபிஷேகத்தின் போது இறை சக்தி கொடுக்கப்படும். பின்னர் கருவறையில் குருக்கள் பூஜை செய்வார்கள்.

அஷ்டபந்தனம் சாத்தப்பட்ட சில மணி நேரங்களில் அவை கலைக்கப்பட்டு மீண்டும் சாத்தப்பட்டு இருந்தால் பின்னாளில் இதுபோன்ற விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கலவை உறுதித் தன்மை அடைந்த பின்னர் உடைக்கவோ, பெயர்க்கும் முயற்சி நடக்க வாய்ப்பில்லை. தெய்வ குற்றம் ஆகிவிடும் என்றனர்.

அகில இந்திய இந்து மக்கள் கட்சியை சேர்ந்த தங்கராஜ் சார்பில் எஸ்.பி. அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையில் சாத்தப்பட்ட அஷ்டபந்தன மருந்து கரைந்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அதனுள் இருந்த விலை மதிப்பில்லாத ரத்தினங்கள் நகைகள் என்ன ஆனது? பாதுகாப்பாக உள்ளதா? அல்லது களவாடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகந்நாதன் கூறியதாவது:-

அஷ்டபந்தன மருந்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கோவில் குருக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அற நிலையத்துறை ஆணையர் அலுவகத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு பழுதை சரிசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஸ்தபதி முத்தையா ஆய்வு மேற்கொண்டு அற நிலையத்துறைக்கு அறிக்கை வழங்கியுள்ளார். மேலும் சேதத்தை சரி செய்ய பாலாலயம் நடத்துவதற்கு ஸ்தபதிகள் சார்பில் 3 தேதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தேதியில் பாலாலய பூஜை நடத்தப்பட்டு அஸ்டபந்தன மருந்து புதியதாக சேர்க்கப்பட்டு பழுதுகள் சரி செய்யப்படும்.

அஷ்டபந்தன மருந்து 12 மணி நேரத்தில் இருகும் தன்மை கொண்டது. அதனால் அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு ஏதும் இல்லை. கும்பாபிஷேகத்தின் போது கர்ப்பகிரக பீடத்தில் வைக்க பக்தர்கள் அதிக அளவில் நகைகளை வழங்கியுள்ளனர்.

அதில் சிறிதளவு மட்டுமே பீடத்தில் வைக்க முடியும். மற்றவை பாதுகாப்பாக கோவில் கருவூலத்தில் உள்ளது. மேலும், அஷ்டபந்தன மருந்தின் அடியில் சார்த்தப்பட்ட தங்கம், வெள்ளி, மாணிக்கம் நவரத்தின கற்கள் ஆகியவை வேலூர் நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. அதற்கான பதிவேடு உள்ளது.

தற்போது அதனை சரிபார்த்து அவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். அஷ்டபந்தன மருந்தில் இருந்து நகைகள் திருடுபோக 100 சதவீதம் வாய்ப்பில்லை.

நகை சரிபார்ப்பு அதிகாரி வந்து ஏற்கனவே வைத்த நகைகளை சரிபார்க்கும் போது நகை எண்ணிக்கை குறைந்தால் சம்பந்தப்பட்ட குருக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




Tags:    

Similar News