செய்திகள்

ஆரணியில் டெங்கு காய்ச்சலுக்கு ஆண் குழந்தை பலி

Published On 2017-10-23 11:41 GMT   |   Update On 2017-10-23 11:41 GMT
ஆரணியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி நகர் அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு மோனிகா (வயது 5) என்று ஒரு மகளும், ரோகித் (2½) என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜான் திடீரென உயிரிழந்தார். 2 குழந்தைகளும் தாய் அரவணைப்பில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை ரோகித்திற்கு காய்ச்சல் ஏற்பட்டது.

ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். காய்ச்சல் குறையாமல் நெருப்பாய் கொதித்தது. மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை ரோகித் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை இறந்த சில மாதங்களில் குழந்தையும் இறந்த சம்பவம் தாய் மற்றும் உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து குழந்தையின் தாய் சோனியா கூறுகையில்:-

எனது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. சமீபத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார்.

ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்ய வந்த போது டெங்கு சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இங்கு இல்லை.

டெங்கு சிகிச்சை கிடைக்காமல் அவதி படுவதாகவும் அமைச்சரிடம் நான் உள்பட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் புகார் கூற முயன்றோம். ஆனால் ஆரணி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் எங்களை தடுத்துவிட்டது.

என் குழந்தை இறப்புக்கு காரணமான ஆரணி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கபட்டு இருப்பவர்களை மீட்டு வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News