செய்திகள்

புதுவையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க பரிசீலனை: நாராயணசாமி அறிவிப்பு

Published On 2017-10-20 06:43 GMT   |   Update On 2017-10-20 06:44 GMT
புதுவையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் அரசு பஸ்களைவிட தனியார் பஸ்களே அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கபட்ட பஸ் கட்டணமே நடை முறையில் இருந்து வந்தது. இது தமிழகத்தைவிட சற்று குறைவாகவும் இருந்தது.

டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் அதிபர்கள் சங்கத்தினர் அரசிடம் வற்புறுத்தி வந்தனர்.

இது சம்பந்தமாக அரசு ஆய்வு செய்து கட்டணத்தை உயர்த்தியது. தீபாவளிக்கு முந்தைய நாள் இதற்கான அறிவிப்பு வெளியானது. நேற்று கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

இதன்படி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒவ்வொரு ஸ்டேஜூக்கும் ரூ.2 கூடுதலாக வசூலிக்கப்படும்.

புறநகர் பஸ்களில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 75 காசு வசூலிக்கப்படும்.

இதேபோல விரைவு பஸ்கள், குளிர்சாதன பஸ்கள் கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 25 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கட்டண உயர்வை எதிர்த்து நேற்றும், இன்றும் பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகரில் இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி கூறியதாவது:-

பஸ் கட்டண உயர்வு குறித்து பல்வேறு குழுக்கள் அமைத்து அதன் கருத்துக்களை கேட்டு தான் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்தோம்.

பஸ் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Tags:    

Similar News