செய்திகள்

மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2017-10-13 10:21 GMT   |   Update On 2017-10-13 10:21 GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டாவது 100 அடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கும் கீழ் இருந்ததால் அப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

அதன் பிறகு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 2-ந் தேதி 94.84 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து அன்று காலை காவிரி ஆற்றில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்து நேற்று 31 ஆயிரத்து 236 கன அடியாக உயர்ந்தது. இன்று நீர் வரத்து குறைந்து 21 ஆயி ரத்து 264 கன அடியானது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று 97.3 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 97.51 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கடந்த 2014-ம் ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளும் தாமதமாக குறைந்த அளவு தண்ணீரே திறந்து விட்டதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதித்தது.

இந்தாண்டு அணையின் நீர்மட்டம் தற்போது 97.51 அடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்தும் 21 ஆயிரத்து 264 கன அடியாக உள்ளது. இந்த நீர் வரத்து தொடருமா? அணையின் நீர்மட்டம் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டாவது 100 அடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Tags:    

Similar News