செய்திகள்

புதுவையில் டெங்கு விழிப்புணர்வு: கவர்னர் கிரண்பேடி நடைபயணம்

Published On 2017-10-07 05:02 GMT   |   Update On 2017-10-07 05:02 GMT
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து விழிப்புணர்வு நடைபயணத்தை கிரண்பேடி தொடங்கினார்.
புதுச்சேரி:

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டி இருந்தார். அதோடு தானே களத்தில் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாகவும் அறிவித்து இருந்தார்.

இதன்படி கடந்த 2 தினங்களாக புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு கவர்னர் கிரண்பேடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டுக்கு அருகே குப்பைகளை கொட்டாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ளும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கி.மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து விழிப்புணர்வு நடைபயணத்தை கிரண்பேடி தொடங்கினார்.

கவர்னர் கிரண்பேடியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.

நடைபயணத்தின் போது கவர்னர் கிரண்பேடி தனது கையில் ஏடீஸ் கொசுவின் படம் போட்ட பதாகையை பிடித்து வந்தார். வழிநெடுகிலும் பொதுமக்களிடம் வீட்டை யும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அவருடன் வந்தவர்கள் டெங்கு விழிப்புணர்வு கோ‌ஷம் எழுப்பியபடி நோட்டீசும் வழங்கினர்.

கவர்னர் மாளிகையில் இருந்து கடற்கரை சாலை, குருசுகுப்பம், சோலை நகர், பெருமாள் கோவில் வீதி, டி.வி. நகர், மி‌ஷன் வீதி வழியாக மீண்டும் கிரண்பேடி கவர்னர் மாளிகையை அடைந்தார். அங்கு நடைபயணத்தில் உடன் வந்தவர்களுடன் கவர்னர் கிரண்பேடி விடைபெற்று சென்றார்.

காலை 6.30 மணிக்கு தொடங்கிய நடைபயணத்தை 8.15 மணிக்கு கவர்னர் கிரண் பேடி நிறைவு செய்தார்.

Tags:    

Similar News