செய்திகள்

அடக்குமுறையை கையாண்டு ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி: முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2017-10-05 16:47 GMT   |   Update On 2017-10-05 16:47 GMT
மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை இழந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு அடக்கு முறையின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிச்சாமி அரசு அடக்குமுறை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிலமாதங்களுக்கு முன்பு அம்பத்தூரில் நடைபெற்ற தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற நல்லக்கண்ணு, மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்து அதனை வெளியில் தெரிவிக்காமல் நீதிமன்றத்தின் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை இழந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு அடக்கு முறையின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த முயற்சி பலிக்காது. உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் சென்று சேருமா என்ற அச்சம் உள்ளது. பாசன கட்டமைப்புகள் தூர் வாரப்படவில்லை. கடைமடையை வந்தடைவதற்குள்ளாவது தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வெட்டுக்கிளியால் பயிர்கள் பாதித்துள்ளது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கையை முழுமையாக மாநில அரசு செய்ய வேண்டும். முத்துப்பேட்டையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சார்பதிவாளைர் அலுவலகத்தை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் நிலுவைத் தொகை உள்ளதால் விவசாயிகள் கடன் பெற இயலாத சூழல் உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளை உற்சாகப்படுத்தி பணியை தொடங்கும் வகையில் கூட்டுறவு, மற்றும் தேசியமய வங்கியில் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய செயலாளர் ஏ.பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News