செய்திகள்

தமிழகத்துக்கு தைரியமான அரசியல்வாதி தேவை: சசிகலா புஷ்பா எம்.பி. பேட்டி

Published On 2017-09-25 04:47 GMT   |   Update On 2017-09-25 04:47 GMT
மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தமிழகத்திற்கு தைரியமான அரசியல்வாதி தேவை என்று மதுரை விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி நிருபர்களிடம் கூறினார்.
அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை. ஜெயலலிதாவை ஒரு குடும்பம் கொலை செய்ததாக கூறுகிறார்கள். முதல்வர் அமைக்கும் விசாரணை கமி‌ஷன் தீர்ப்பு வந்தால் தான் முடிவு தெரியும்.

தமிழ்நாட்டிற்கு நல்லது செய்த பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மம் அகல வேண்டும். ஒருவர் 1 வாரம் நல்லவராக தெரிகிறார். அடுத்த வாரம் அவர் நிலை மாறுகிறார். மக்களுக்காக போராடும் அரசியல்வாதிகள் இங்கு இல்லை.

முன்னாள் முதல்வரோ, இந்நாள் முதல்வரோ, அமைச்சர்களோ சுயநலமாக செயல்படுகின்றனர். பதவியை தக்கவைக்க போராடுகின்றனர்.

பொதுக்குழுவில் தினகரனை தரக்குறைவாக முதல்வர் பேசியிருக்கக் கூடாது. மாமியார் வீட்டுக்கு செல்வாய் என கூறியது தவறு.

தினகரன் அரசியலில் எந்த பிரச்சினையையும் சமாளிக்கக்கூடிய திறன் கொண்டவராக உள்ளார். பதவிக்காக ஓ.பன்னீர் செல்வம் ஒரு வாரம் நல்லவராக தெரிகிறார். அடுத்த வாரம் அவரின் சுயரூபம் தெரிகிறது.

அவரவர் உரிமைக்காக போராடுகின்றனர். மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தமிழகத்திற்கு தைரியமான அரசியல்வாதி தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News