செய்திகள்

கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் மூளை சாவு: பள்ளி ஆசிரியர் கைது

Published On 2017-09-19 09:23 GMT   |   Update On 2017-09-19 09:23 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கிரிக்கெட் மட்டை தாக்கியத்தில் மாணவர் மூளை மரணம் அடைந்தார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியரை கைது செய்யப்பட்டனர்.

சேலம்:

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். ரிக் தொழிலாளி. இவரது மனைவி சின்ராயி. இவர்களது மகன் விக்னேஷ்வரன் (வயது 13).

இவர் அந்த பகுதியில் உள்ள விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

கடந்த 16-ந் தேதி விடுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விக்னேஷ்வரன், சதீஷ் உள்பட சிலர் கபடி விளையாடி கொண்டிருந்தனர். அதன் அருகில் ஆசிரியர் குப்புசாமி சில மாணவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது ஆசிரியர் குப்புசாமி ஒரு பந்தை அடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் மட்டை அவரது கையில் இருந்து வேகமாக நழுவி சென்றது. அந்த மட்டை அருகில் கபடி விளையாடி கொண்டிருந்த சதீஷ், விக்னேஷ்வரன், ஆகிய 2 பேர் மீதும் பட்டது.

இதில் சதீஷ் சிறுகாயத்துடன் தப்பினார். விக்னேஷ்வரன் பின் தலையில் ரத்தம் கசிந்ததால் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது விக்னேஷ்வரன் சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றதாக டாக்டர்கள் கூறினர். ஆனாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று மாலை விக்னேஷ்வரனின் உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை கமி‌ஷனர் சுப்புலெட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும், அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மொளசி போலீசார் ஆசிரியர் குப்புசாமியை கைது செய்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அங்கு உறவினர்கள் திரண்டுள்ளதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News