செய்திகள்

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும்: வைகோ

Published On 2017-09-16 12:23 GMT   |   Update On 2017-09-16 12:23 GMT
ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டியில் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்:

ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழா மாநாடு தஞ்சையில் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

மாநில சுயாட்சியை நசுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாநில சுயாட்சி தத்துவத்தை காப்பாற்ற சென்னை காமராஜர் அரங்கில் நவம்பர் 20-ந்தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் சரியான தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்தியாவின் எதிர்காலத்தை காக்க, இந்தியாவின் மதச்சார்பின்மையை காக்க, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட, ஜனநாயகத்தை காக்க, திராவிட கொள்கைகளை காப்பாற்ற பாடுபடுவோம்.

ஷேல் எரிவாயு, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க இளைஞர் சமுதாயம், விவசாயிகளை போராட தூண்டி விடுவேன். இதை நான் பதவிக்காகவோ, ஓட்டுக்காகவோ சொல்லவில்லை. நமது மாநிலம் அழிந்து விடாமல் காக்க நாம் போராட வேண்டும். தமிழர்களுக்கு எங்களைப்போன்று சேவை செய்த இயக்கம் எதுவும் கிடையாது. பாசி‌ஷ நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் 1970-ம் ஆண்டு வரை ஊழல் கிடையாது. எங்களிடமும் ஊழல் கிடையாது. தமிழகத்துக்கு வரும் ஆபத்தை ம.தி.மு.க.வால் மட்டுமே தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவ கல்வி பயில்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது அநீதியாகும். எனவே மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் எனும் நிலையில் இருந்து தமிழகத்திற்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்று தர மத்தியஅரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வரலாறு காணாத போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும்.

மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு புகுத்தப்பட்டது போன்று பொறியியல் கல்விக்கும் நுழைவுத்தேர்வை கொண்டு வர வேண்டும் என்று புதிய கல்வி கொள்கையை மத்தியஅரசு வரையறுக்கின்றது. மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறையை முழுமையாக மாநில அதிகார பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி மரபு உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். காவிரி பிரச்சினையில் மிகவும் கவனமாக தமிழகஅரசு தமது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே எக்காரணம் கொண்டும் கர்நாடகா, அணைகள் கட்ட மத்தியஅரசு அனுமதிக்கக்கூடாது.

வளம் கொழிக்கும் காவிரிப்படுகை மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்தது போன்ற திட்டங்களை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். மக்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டங்களை செயல்படுத்த முயன்றால் விபரீத விளைவுகள் ஏற்படும். காவிரிப்படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 23 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

வைகோ போராட்ட களங்கள் கண்காட்சியை புலவர் முருகேசன் திறந்து வைத்தார். மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, கணேசமூர்த்தி, நாசரேத்துரை, மல்லைசத்யா, செஞ்சி மணி, வெல்லமண்டி சோமு, மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் தஞ்சை மாவட்ட செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தேர்தல் பணிக்குழு செயலாளர் விடுதலைவேந்தன் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News