செய்திகள்

அத்திப்பட்டு புதுநகரில் தண்டவாள பராமரிப்பு பணியால் மின்சார ரெயில்கள் ரத்து

Published On 2017-09-13 07:13 GMT   |   Update On 2017-09-13 07:13 GMT
அத்திப்பட்டு புதுநகரில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியுள்ளாகினர்.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தண்டவாள பராமரிப்பு பணி நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தொடங்கியது. இந்த பணியை 2 மணி நேரத்தில் முடிக்க ஊழியர்கள் முடிவு செய்து இருந்தனர்.

ஆனால் இன்று காலை 10 மணி வரை பராமரிப்பு பணி தொடர்ந்து நடந்தது. இதனால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வந்த மின்சார ரெயில்கள் அனைத்தும் எண்ணூர் வரை இயக்கப்பட்டது.

இதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் எண்ணூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றன.

மின்சார ரெயில்கள் ரத்து பற்றி ரெயில்வே ஊழியர்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இன்று காலை ஏராளமான பயணிகள் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர்.

அவர்கள், மின்சார ரெயில் வராத நிலையில் டிக்கெட் கொடுத்தது குறித்து அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளை ரெயில்வே ஊழியர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

பராமரிப்பு பணி காரணமாக சென்னையை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பொன்னேரி ரெயில் நிலையத்தில் லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதே போல் சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமண்டல், கவுரா, ஜமுதாபி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் வழியில் நிறுத்தப்பட்டன. தண்டவாள பரமாரிப்பு பணி முடிந்ததும் அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
Tags:    

Similar News