செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக கும்பகோணம் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2017-09-12 12:26 GMT   |   Update On 2017-09-12 12:26 GMT
நீட் தேர்வுக்கு எதிராக கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:

நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும், மத்திய பொது பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கும்பகோணம் பாலக்கரையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று 5-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலக வளாகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்றது.

திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 400 பேர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

Tags:    

Similar News