செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: கரூரில் தம்பிதுரை வீட்டு முன்பு தர்ணா போராட்டம் - 2 பேர் கைது

Published On 2017-09-11 09:43 GMT   |   Update On 2017-09-11 09:43 GMT
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் தம்பிதுரை வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வழங்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கரூர் ராமானுஜ நகரில் உள்ள பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வீட்டு முன்பு 2 வாலிபர்கள் வந்து நின்றனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த திரவம் நிரப்பப்பட்ட பாட்டிலை கையில் எடுத்தனர்.

திடீரென யாரும் எதிர் பார்க்காத வகையில் தாங்கள் நீட் தேர்வை கண்டித்து தீக்குளிக்க போகிறோம் என மிரட்டினர். இதைப்பார்த்த தம்பிதுரை வீட்டின் காவலாளிகள் உடனடியாக கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர்.

அதன்பேரில் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அந்த வாலிபர்கள், தங்கள் குழந்தைகளும் அரசு பள்ளியிலேயே படிக்கிறார்கள். அவர்களுக்கும் வருங்காலத்தில் மாணவி அனிதாவின் நிலைமையே ஏற்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் கையில் ஜல்லிக் கட்டுக்க பீட்டா, அனிதாவுக்கு நீட்டா? என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு கோ‌ஷங்கள் எழுப்பினர். அந்த சமயம் அங்கு வந்த போலீசார் வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் குட்டிராஜா என்றும், இருவரும் ஜவுளி தொழிலாளர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News