செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய நலக்குழு ஆய்வு

Published On 2017-08-12 08:39 GMT   |   Update On 2017-08-12 08:39 GMT
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை, தேசிய நலக்குழு இயக்குநர் தரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை, தேசிய நலக்குழு இயக்குநர் தரேஸ் அகமது ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள் மூலம் டெங்கு மற்றும் பிற காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம், நகர்ப்புறங்களில் முழுமையாக சுத்தம் செய்யும் பணிகளில் ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் தற்போது வரை 73 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது ஆய்வக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 67 பேர் தகுந்த சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 6 பேர், அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் களும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவர்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் பிற பருவ கால நோய்களுக்கு போதுமான மருந்து மாத்திரைகள் மற்றும் பிற மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும், 1,110 பணியாளர்கள் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் குமார், இணை இயக்குநர் தயாளன், துணை இயக்குநர் பிரபாகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் வேல் முருகன் கணேஷ், செவிலியர் கலை மற்றும் ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News