செய்திகள்

சென்னையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் அதிரடியாக மீட்பு

Published On 2017-08-12 08:06 GMT   |   Update On 2017-08-12 08:06 GMT
சென்னை அடையாறில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 11 கிரவுண்டு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள், பல்வேறு நகரங்களில் வணிக வளாகங்கள், வீடுகள் போன்றவை உள்ளன.

இதனை ஆக்கிரமிப்பாளர்கள் பல ஆண்டுகளாக வாடகை எதுவும் செலுத்தாமல் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான 4.5 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

இதனை தொடர்ந்து சென்னை அடையாறு பெசன்ட் அவென்யு பகுதியில் உள்ள ரூ.50 கோடி மதிப்பிலான 11 கிரவுண்டு இடத்தை அப்பகுதியை சேர்ந்த பூசாரி அம்மா பாலாஜி என்பவர் 18 ஆண்டுகளாக குழந்தை அங்காளம்மன் திருக்கோவில் என்ற பெயரில் நடத்தி வந்தார்.

இதனை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் முன்னிலையில் மீட்டனர். அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

உடன் சென்னை அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, திருக்கோவில் உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News