செய்திகள்

தீபா அணி காணாமல் போய்விட்டது: தஞ்சையில் திவாகரன் பேட்டி

Published On 2017-08-12 05:39 GMT   |   Update On 2017-08-12 05:39 GMT
தீபா அணி காணாமல் போனதுபோல் ஒவ்வொரு அணியாக காணாமல் போகும். சசிகலா தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.வே உண்மையான அ.தி.மு.க ஆகும் என்று தஞ்சையில் திவாகரன் கூறினார்.
தஞ்சாவூர்:

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் மாமியாரும் சசிகலாவின் அண்ணன் மனைவியுமான சந்தான லட்சுமி மரணமடைந்தார்.



இதையொட்டி அவரின் உருவ பட திறப்பு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன், எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), உமா மகேஸ்வரி (விளாத்திக் குளம்), சுப்பிரமணியன் (சாத்தூர்), சுந்தர்ராஜன் (ஒட்டப்பிடாரம்) மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), தங்கத்துரை (நிலக்கோட்டை), பழனியப்பன் (பாப்பி ரெட்டிபட்டி), ஜக்கையன் (கம்பம்), கதிர்காமு (பெரியகுளம்) முத்தையா (பரமக்குடி) ரெங்கசாமி (தஞ்சாவூர்) மற்றும் கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 9 இடங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். முதலாவதாக மதுரை மேலூரில் நடக்கிறது. அதன்பிறகு 9 கூட்டங்களும் நடத்தி முடித்த பிறகு நல்ல முடிவு ஏற்படும். 122 ஏம்.எம்.எல்.ஏக்களும் ஆதரவாளர்கள்தான். நாங்கள் எந்த பலப் பரீட்சைக்கும் போகவில்லை. ஆட்சியில் சரியான நபர்கள் தான் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது.

ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் பல திட்டங்கள் எல்லாம் இப்போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதுதான் எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறதா? என என்னால் சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர் மறைந்த 10-வது நாளில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்திற்கு பாதுகாப்பு அளித்து ஏற்பாடு செய்தது நான் தான்.

அ.தி.மு.க.வில் தினகரன் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி, தீபா அணி என 4 அணிகள் இருந்தன. இதில் தீபா அணி காணாமல் போய்விட்டது. அதேபோல் ஒவ்வொரு அணியாக காணாமல் போகும். சசிகலா தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.வே உண்மையான அ.தி.மு.க ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News