செய்திகள்

திண்டுக்கல் அருகே திருமண உதவி திட்டத்துக்கு லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது

Published On 2017-07-27 11:06 GMT   |   Update On 2017-07-27 11:06 GMT
திருமண நிதி உதவி திட்டத்துக்கான மனுவை அனுப்ப ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

குஜிலியம்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆறுமுகம். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி செல்வராணி (வயது 22). இவருக்கு அன்னை தெரசா ஆதரவற்றோர் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை மற்றும் தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்க குஜிலியம்பாறை சமூக நல விரிவாக்க அலுவலகத்தில் மனு அளித்தார்.

இங்கு சமூக நல விரிவாக்க அலுவலகராக பணிபுரியும் ரேணுகா (52) தனக்கு ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தால்தான் இந்த மனுவை சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அனுப்புவேன். அதன் பிறகுதான் உங்களுக்கு திருமண உதவித் தொகை கிடைக்கும் என கூறினார்.

ஆறுமுகம் தான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் தன்னால் ரூ.5 ஆயிரம் வழங்க முடியாது என்று கூறினார். ஆனால் ரூ.2500 பணமாவது கொடுத்தால்தான் இந்த மனுவை நான் அனுப்புவேன் என்று ரேணுகா கண்டிப்பாக கூறி விட்டார்.

பணத்தை தராததால் ஒரு வாரமாக மனுவை அனுப்பாமல் தன்னிடமே ரேணுகா வைத்திருந்தார். கடைசியாக ரூ.2000 லஞ்சம் தர ஆறுமுகம் சம்மதித்தார். இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார்.

அவர்கள் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இன்று அவரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் கீதா, ரூபாசீதாராணி ஆகியோர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரேணுகா குஜிலியம்பாறை பகுதியில் இது போல பலரிடம் திருமண உதவித் தொகைக்காக லஞ்சம் வாங்கியதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். ஆனால் யாரும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தைரியமாக தெரிவிக்கவில்லை. பணம் தராத பொதுமக்களிடம் ரேணுகா அடாவடியாக பேசி பணம் வசூலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வடமதுரையில் உள்ள அவரது வீட்டுக்கும் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News