செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி

Published On 2017-07-27 10:40 GMT   |   Update On 2017-07-27 10:40 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்து தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்ணை நல்லூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பேபி (வயது 45). இவர்களுக்கு எழில்குமார் (19), பிரசாந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் எழில்குமார் கடலூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பேபி தனது மகன் எழில்குமாருடன் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நடந்து சென்றார். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது நிலத்தை கடந்து செல்ல முயன்ற போது அவரது கரும்பு தோட்டத்தில் வைத்திருந்த மின்வேலியை எதிர்பாராதவிதமாக பேபி மற்றும் எழில்குமார் மிதித்து விட்டனர்.

இதில் 2 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் உடல் கருகி பேபி மற்றும் எழில்குமார் இறந்தனர். வெகுநேரமாக வீட்டுக்கு தனது தாய் மற்றும் சகோதரர் வராததை கண்டு பிரசாந்த் அவர்களை தேடி விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு பேபி மற்றும் எழில்குமார் உடல் கருகி இறந்து பிணமாக கிடைப்பதை பார்த்து கதறி அழுதார். ஊர் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பாலசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மின்வேலி அமைத்த பாஸ்கரனை கைது செய்து, மின்வேலியை அகற்ற வேண்டும் என கோரி போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் பேபி மற்றும் எழில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News