செய்திகள்

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Published On 2017-07-27 06:27 GMT   |   Update On 2017-07-27 12:04 GMT
ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த 95 ஓவியங்கள் மற்றும் 2 சிலிக்கான் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.





அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்த மணிமண்டத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு இன்று காலை 10 மணி அளவில் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11.15 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைந்தார் மோடி. அதன்பின் கார் மூலம் புறப்பட்டு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து, பின்னர் காலை 11.38 மணியளவில் மணிமண்டபத்தை திறந்துவைத்தார்.



பின்னர் மணி மண்டபத்தினுள் வைக்கப்பட்டிருந்த அக்னி ஏவுகணை மாதிரி மற்றும் கலாம் புகைப்படங்களை பார்வையிட்டார். கலாம் வெண்கலச் சிலையை திறந்து வைத்த அவர், கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் கலாம் குடும்பத்தினரை சந்தித்த மோடி, அவர்களிடம் நலம் விசாரித்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
Tags:    

Similar News