செய்திகள்

ராமநாதபுரத்தில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்: லாரி டிரைவர் கைது

Published On 2017-07-25 04:17 GMT   |   Update On 2017-07-25 04:17 GMT
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 2 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் ராமநாதபுரத்தில் பிடிபட்டன. இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சோதனைச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்று ஆந்திர மாநில லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று லாரியை சோதனையிட்டனர். அப்போது மூடைகளில் வெங்காயம் இருந்ததை கண்டனர்.

இருப்பினும் சந்தேகத்தின்பேரில் வெங்காய மூடைகளை அகற்றிப் பார்த்தபோது அதற்கு கீழே ஏராளமான செம்மரக் கட்டைகள் இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 2 டன் எடையுள்ள இந்த செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்திருப்பதை உறுதி செய்த போலீசார், செம்மரக் கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூர் சல்க்காபுரம் பகுதியை சேர்ந்த வெங்கட்டராமுடு மகன் பாலகிருஷ்ணடு (வயது 43) என்பது தெரியவந்தது.

அவர் கூறுகையில், ஆந்திராவில் சிலர் இந்த வெங்காயம் மற்றும் செம்மரக் கட்டைகளை ராமேசுவரத்திற்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும், ராமநாதபுரத்திற்கு சென்றால் அங்கு செல்போனில் சம்பந்தப்பட்டவர்கள் அழைத்து லாரியுடன் ராமேசுவரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என தெரிவித்ததாகவும் கூறினார். அதன்படி லாரியில் அவற்றை ஏற்றிக்கொண்டு வந்து ராமநாதபுரம் பகுதியில் காத்திருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, பாலகிருஷ்ணடுவை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை அனுப்பியவர்கள் யார், ராமேசுவரம் பகுதியில் அவற்றை பெற்றுக்கொள்ளும் நபர்கள் யார், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அவற்றை கடத்த திட்டமிட்டு இருந்தார்களா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News