செய்திகள்

மதுரையில் நகை கடையை உடைத்து 80 பவுன் கொள்ளை

Published On 2017-07-24 11:55 GMT   |   Update On 2017-07-24 11:55 GMT
மதுரையில் நகை கடையின் பூட்டை உடைத்து 80 பவுன் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை ஜடாமுனி கோவில் தெரு பகுதியில் லட்சுமி நாராயணா ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் முருகன் (வயது 35).

நேற்று முன்தினம் இவர், இரவு 11 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை விடுமுறை என்பதால் இன்று மதியம் 1.30 மணியளவில் தாமதமாக கடையை திறக்க வந்தார். அப்போது ‌ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே போய் பார்த்தபோது கடையில் இருந்த 80 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் கடையை உடைத்து நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரிந்தது.

அதன் பின்னர் மர்ம நபர்கள், பக்கத்தில் இருந்த ஜெயராம் ஜூவல்லரி கடையை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து நகை கடை உரிமையாளர்கள் முருகன், ஜெயராமன் ஆகியோர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து நகை கடைகளில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொள்ளை நடந்த இரு நகை கடைகளும் ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள சிறிய சந்தில் கடைசி பகுதியில் உள்ளன. அதனால் மர்ம நபர்களுக்கு நகைகளை திருட வசதியாக போய் விட்டது.

மதுரையில் பரபரப்பாக காணப்படும் பகுதியில் நகை கடைகளை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News