செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே பட்டா கேட்டு 6 குழந்தைகள் உள்பட 13 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2017-07-24 08:21 GMT   |   Update On 2017-07-24 08:21 GMT
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பட்டா கேட்டு 6 குழந்தைகள் உள்பட 13 பேர் தீக்குளிக்க முயன்றனர். நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

கோவை:

கோவை சூலூர் கொங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் (47). இவரது மனைவி அன்னபூரணி (40). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். சரவணகுமார் இன்று தனது தாய் அங்காளத்தாள் (65) மாமா மாசாணம் (70) மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 குழந்தைகள் உள்பட 13 பேர் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்த போது நடுரோட்டிலேயே தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றினர். அப்போது பட்டா கேட்டு கோ‌ஷம் போட்டு தீக்குளிக்க முயன்றனர். இதை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு இருந்த உதவி கமி‌ஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினர்.

பின்னர் போலீசார்13 பேரிடமும் இருந்து மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கி வீசினர். நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்ந்து போலீசார் 13 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து சரவணகுமார் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக பட்டா கேட்டு வருகிறோம். பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டும் பட்டா கேட்டு தற்கொலைக்கு முயன்றேன். அப்போது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டா தராததால் வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை. இதனால் எங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பட்டா கேட்டு குடும்பத்துடன் தீ குளிக்க வந்தோம் என்றார்.

Tags:    

Similar News