செய்திகள்

மத்திய அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்: ஈஸ்வரன்

Published On 2017-07-23 12:09 GMT   |   Update On 2017-07-23 12:09 GMT
மத்திய அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை:

கோவை சின்னியம்பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறு நிறுவனங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு 2 ஆண்டுகளுக்காவது சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து பேச வேண்டும். ‘நீட்’ தேர்வை பொறுத்தவரை தமிழகத்துக்கு விலக்கு கிடைத்து விடும் என்று ஒரு ஆண்டாக கூறி மாணவர்களை ஏமாற்றி விட்டனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள ஜனாதிபதியிடம் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒப்புதல் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கோவைக்கு மெட்ரோ ரெயில் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை பொள்ளாச்சி, பல்லடம், சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர் வரை இணைத்து செயல்படுத்தினால் தான் மக்கள் முழுமையாக பயன் அடைவார்கள். 110-வது விதியின் கீழ் அறிவித்து விட்டு 111-ல் செயல்படுத்தாமல் விட்டு விடக்கூடாது. இந்தி தெரியாததால் தான் தமிழர்கள் மத்திய அரசு பணிகளில் சேர முடியவில்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விரும்பிய மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம். அதற்காக இந்தியை திணிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News