செய்திகள்

தமிழ்நாட்டு அரசியலை பலப்படுத்த கமல்ஹாசன் அவசியம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-07-21 05:37 GMT   |   Update On 2017-07-21 05:37 GMT
தமிழக அரசியல் களத்தை கமல்ஹாசன் வந்து தான் பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
தஞ்சாவூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் பெற்ற வெற்றி விளிம்பு நிலை மக்களின் வெற்றி. அவர் எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதால் அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சியினரும் விரும்பக்கூடிய குடியரசு தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் பல போராட்டங்கள் நடக்கிறது. ஆனால் அந்த போராட்டங்களை திசை திருப்புவது தான் அதிகம் நடக்கிறது.

மக்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டங்களில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் ஊடுருவி விடாமல் இருக்க தமிழக அரசு மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் வர ஆரம்பித்து இருப்பது மிக அபாயகரமானது. அவர்களில் சிலர் தமிழகத்தில் பணிபுரிந்து அவர்கள் பெயரில் போராட்டங்கள் முன்னெடுத்து செல்வது கவலை அளிக்கிறது. மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி அளித்து, பரிசோதனைக்கு வித்திட்டது தி.மு.க.வும், காங்கிரசும் தான். மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தியது பா.ஜனதா.

மக்களுக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்றும், மக்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மக்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பம் இல்லாததால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தை போக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சி சிறப்பாக செயல்படவில்லை. எதிர்க்கட்சி வெளிநடப்பு கட்சியாக செயல்படுகிறது. முரசொலி விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார் என்று சொல்கிறார்கள். அவர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. நீங்கள்(கமல்) எத்தனை காலம் திரைப்பட துறையில் இருக்கிறீர்கள். மக்கள் பிரச்சினைக்காக போராடி அதை தீர்க்க அக்கறையுடன் செயல்பட்டதுண்டா?. தமிழக அரசியல் களத்தை கமல்ஹாசன் வந்து தான் பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை. சுயநலவாதிகள் வந்து தான் அரசியல்களத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். டெல்லியில் விவசாயிகள் தமிழர்கள் பண்பாட்டை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள் என விவசாயிகளே குற்றம்சாட்டுகிறார்கள். விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பது மாநிலஅரசின் ஆளுமைக்கு உட்பட்டது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

திராவிட கட்சிகள் மாநில உரிமையை மீட்க முயற்சி செய்யவில்லை. தொலைநோக்குடன் நீர் திட்டத்தை கொண்டு வரவில்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் எத்தனை அணைகள் கட்டப்பட்டன, நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த பயிற்சி அளிக்க உள்ளோம். ஜி.எஸ்.டி. வரி முகவர்களுக்கு சென்னையில் நாளை(சனிக்கிழமை) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ஜனதா நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News