செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை நகரம் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2017-06-23 17:46 GMT   |   Update On 2017-06-23 17:46 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

புதுச்சேரி:

இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு எல்லா வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய நகரங்கள் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 2 தடவை நகரங்கள் தேர்வு நடந்துள்ளது. அதில் இந்தியா முழுவதும் 60 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.

புதுவை நகரையும் இந்த திட்டத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று புதுவை அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது.

புதுவையில் கடந்த ஆட்சியில் உழவர்கரை நகராட்சியை இந்த திட்டத்தில் சேர்ப்பதற்காக முயற்சித்து வந்தனர். 2 தடவை பட்டியல் அறிவித்த போதும் அதில் உழவர்கரை தேர்வாகவில்லை.

காங்கிரஸ் ஆட்சி வந்ததும் உழவர்கரையை மாற்றி விட்டு புதுவை நகராட்சி பகுதியை இந்த திட்டத்தில் சேர்ப்பதற்கு முயற்சித்தனர். இதற்காக பல்வேறு அறிக்கைகளை அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அனுப்பி வந்தது.

இன்று 3-ம் கட்டமாக ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் புதுவை நகரமும் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுவையுடன் சேர்ந்து மொத்தம் 30 நகரங்கள் தேர்வாகி உள்ளன.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருவனந்தபுரம், அமராவதி, ஸ்ரீநகர், பெங்களூரு, ஜம்மு போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த 30 நகரங்களுக்கும் ரூ.57 ஆயிரத்து 393 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்த போவதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.

Tags:    

Similar News