search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் சிட்டி திட்டம்"

    • உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
    • தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    கோவை:

    கோவை நகரில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், முத்தணன் குளம், உக்கடம் பெரிய குளம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    செயற்கை நீரூற்றுகள், பிரமாண்ட டவர்கள், பொம்மை சிற்பங்கள், குளத்துக்குள் நடைபாதை, படகு சவாரி என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    சமீபத்தில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களை தேர்வு செய்து விருது வழங்கியது. அதில் பில்ட் என் விரான்மென்ட் என்ற தலைப்பில் கோவைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கோவையில் வருகிற 16-ந் தேதி தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    அதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 150 நகரைச் சேர்ந்த மேயர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் கமிஷனர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் கருத்தரங்கு முடிந்ததும் உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள அனுபவ மையம் மற்றும் ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், வாலாங்குளத்தில் மேம்பாலத்துக்கு கீழ் அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலையை அக்குழுவினர் சுற்றி பார்க்கிறார்கள்.

    இதையொட்டி ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்வதற்கு உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் கொண்ட குழு நியமித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    • புதிதாக கட்டப்பட உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
    • முதலமைச்சரின் தஞ்சை வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக மாநகர் முழுவதும் தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகலில் தஞ்சாவூருக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அவர் தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதையடுத்து மாலை 5 மணி அளவில் தஞ்சைப் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு மைய அரங்கு கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

    அங்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநாட்டு மைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்தபடியே ஆம்னி பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா ), ராஜக்கோரி மயானத்தில் எரிவாயு தகன மையம், சூரிய மின் நிலையம், மேம்படுத்தப்பட்ட காந்திஜி வணிக வளாகம், கருணாசுவாமி குளம் பயன்படுத்தும் பணி, மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், புத்தகம் கலையரங்கம் சீரமைப்பு, நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம், மேம்படுத்தப்பட்ட பெத்தண்ணன் கலையரங்கம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் இருப்போர் தங்கும் அறை உள்பட ரூ.137 கோடியே 51 லட்சம் மதிப்பில் முடிவடைந்த 14 கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

    பின்னர் புதிதாக கட்டப்பட உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மகாராஜா மஹாலில் நடைபெறும் பந்தல் சிவா இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சரின் தஞ்சை வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக மாநகர் முழுவதும் தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன. பலவிதமான வகைகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போக்குவரத்து பாதிப்பு-பொதுமக்கள் அவதி
    • பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாநகரம், முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்றை கொண்டது. இந்தியாவில் அகழி யுடன் கூடிய ராணுவ ரீதியாக கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோட்டை என்ற பெருமை கொண்டது.

    வேலூர் நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1947-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு 40 வார்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகர எல்லை விரிவாக்கத்தில் தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

    தொழில் நகரமாக விளங்கும் வேலூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்து போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக காட்சி அளிக்கிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் மாநகராட்சி குப்பையை எரிக்காமல் முறையாக அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை சுத்தப்படுத்த மாற்று ஏற்பாடு, கோட்டை அகழி நீர் வெளியேறும் ஆங்கிலேயர் காலத்து கால்வாயை மீட்பது, கன்சால்பேட்டை, இந்திரா நகர் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்று வது, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு நோக்கங்களோடு தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநகரில் பூங்கா அமைத்தல், சாலைகள் புதுப்பித்தல், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

    இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகி விட்டன. சில தெருக்களில் சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் லேசான தூறல் விழுந்தாலே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட தெருக்கள் சேறும், சகதியுமாய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவி கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாக னங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து காயங்களுடன் செல்வது வாடிக்கையாகி விட்டது.

    வேலூர் காகிதப்பட்டறை கிரவுண் தியேட்டரில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து பணிகள் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக பெய்துவரும் சாரல் மழையின் காரணமான, சாலை பள்ளங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கொட்டப்பட்டிருந்த மண் பூமி உள்வாங்கியது. இன்று காலை குடிநீர் கேன்களை ஏற்றி லோடு ஆட்டோ ஒன்று அந்த வழியாக சென்றது. சாலையில் ஆங்காங்கே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஆட்டோவின் சக்கரம் சிக்கிக்கொண்டது. என்னசெய்வது என தெரியாமல் தவித்த டிரைவர் நீண்ட நேரம் கழித்து, அந்த பகுதிகள் உதவியுடன் ஆட்டோவை பள்ளத்தில் இருந்து மீட்டு எடுத்து சென்றார்.

    இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதித்தது. இதே போல மாநகரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் சின்னாபின்னாமாகுகிறது. பணிகள் தொடங்கி அரை குறையாக உள்ள இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டும்.

    • மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார்.
    • ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு கட்டிட அரங்கம் உள்பட பல்வேறு பணிகள் ரூ .140 கோடி மதிப்பில் கட்டி முடிவடைந்துள்ளன.

    இந்தத் திட்ட பணிகளை வருகிற 27-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தநிலையில் இன்று விழா நடைபெறும் இடத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார். அன்று நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதற்கு மறுநாள் 27ஆம் தேதி நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்வற்கான விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மதியம் தஞ்சாவூருக்கு வருகிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலைய வளாகம், பல்நோக்கு மையக் கட்டிட அரங்கம், பழைய திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என பெயர் சூட்டுதல் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்த பல்வேறு திட்ட பணிகளை மாலை 5 மணி அளவில் திறந்து வைக்கிறார். மொத்தம் ரூ.140 கோடி மதிப்பில் முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்றைய தினம் அணைக்கு 4500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய தண்ணீரை பெற முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.

    மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது. 24 மாதத்திற்குள் பணிகள் முடிவடைய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • புதிய பாலத்தில் இருந்து மேலப்பாளையம் சாலை வரை நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பாளை பஸ் நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம், பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல்லை மாவட்ட மக்களின் ஜீவநதியாக விளங்கும் தாமிர பரணி ஆற்று தண்ணீரானது மாநகர பகுதியில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளால் மாசடைவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாசுபாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தாமிர பரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரே நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்துக்காக ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரமாக புதிய பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை தாண்டி மேலப்பாளையம் சாலை வரையிலும் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 15 மீட்டர் அகலம் கொண்ட வகையில் அமைக்கப்படும் இந்த நடை பாதையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விடுமுறை காலங்களிலும், வெள்ள காலகட்டத்தின் போதும் தாமிரபரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வண்ணம் இந்த நடைபாதை அமைக் கப்பட்டுள்ளது. அந்த கால கட்டங்களில் இந்த நடை பாதையில் நின்று தாமிரபரணி ஆற்றின் அழகை புகைப்படம் எடுக்கவும், ரசிக்கும் விதமாகவும் 5 இடங்களில் 'வியூ பாய்ண்ட்' அமைக் கப்படுகிறது.

    தற்போது இங்கு சுமார் 65 சதவீத பணிகள் முடிவடை ந்துள்ள நிலையில் கிரானைட் ஒட்டும் பணி, மின் கம்பங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தாமிரபரணி நதியின் தூய்மையை பாதுகாக்க பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டு வரும் நிலையில் தற்போது அதன் அழகை ரசிக்கும் விதத்தில் நடை பெற்று வரும் இந்த பணியை பொதுமக்கள் பயனுள்ள தாகவே கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் இரவு நேரங்களில் அந்த நடை பாதைகளை மது பிரியர்கள் ஆக்கிரமித்து மது குடிப்பதை தவிர்க்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலாளிகள் மேற்பார்வை யில் காவல் பணிகள் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது என்றும் உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கும் லஞ்ச ஊழலமே காரணம் என உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் தனது தொகுதியில் ஒராண்டில் கட்டி முடித்திருக்க வேண்டிய அண்ணாதிடல் கட்டுமான பணி 2 ½ ஆண்டுகளை கடந்தும் காட்சி பொருளாக உள்ளது என்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நேரு எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

    இதன்படி இன்று காலை தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    அவருடன் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை இயக்கம் லோகு.அய்யப்பன், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தலைமை செயலகத்தின் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தலைமை செயலாளரை சந்திக்க வேண்டும் என கோரினர். ஆனால், தலைமை செயலாளர் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த உலக சுற்று சுழல் தின விழாவில் தலைமை செயலாளர் பங்கேற்று இருந்ததால் அங்கு சென்றனர்.

    மேடையில் விழா நடந்த போது நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளருடன் கிழே நின்றபடி தலைமை செயலாளருக்கு எதிராக பேசினார்.

    இதனால் விழா தடைப்பட்டது. மேடையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோர் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்.

    ஒரு கட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச இடையூறு செய்யமால் வெளியேறுவதாக கூறி சென்றார்.

    அவருடன் வந்த ஆதரவாளர்களும் அங்கிருந்து சென்றனர். இதை தொடர்ந்து விழா நடந்தது.

    • இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சேலம்:

    கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார்.

    அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேலம் பழைய பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பஸ் நிலையம், வணிக வளாகம், நேரு கலையரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    தொடர்ந்து இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார். தூண்கள் மற்றும் ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்டவை எவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்வையிட்டார்.

    இது தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

    அப்போது பஸ் நிலையத்தில் மேலும் என்ன? என்ன? பணிகள் செய்யப்பட உள்ளன?, அவை எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து இரண்டு அடுக்கு பஸ் நிலைய பணிகள் முழுவதும் முழுமையாக செய்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் விடவேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதையடுத்து பழைய பஸ்நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது வெளிப்புற பகுதிகளில் பெயிண்ட் அடிக்கு பணி, மேல் மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன. 

    • பாண்டி பஜார் பகுதிகள் வெளிநாடுகளில் உள்ளது போல் கட்டமைக்கப்பட்டது.
    • மழைநீர் வடிகால் பணிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக செயல்படுத்தப்பட்டன.

    சென்னை:

    இந்தியா முழுவதும் 100 முக்கிய நகரங்களை தேர்ந்தெடுத்து அந்த நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றியமைக்க பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார்.

    அதன்படி சென்னை, ஆக்ரா, வாரணாசி, புனே, அகமதாபாத் உள்பட 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அங்கு ஸ்மார்ட் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தது.

    சென்னையில் ஸ்மார் திட்டப் பணிகள் 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இதற்காக 1000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வந்தது.

    இந்த திட்டத்தின்கீழ் சென்னையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாண்டி பஜார் பகுதிகள் வெளிநாடுகளில் உள்ளது போல் கட்டமைக்கப்பட்டது. அது மட்டுமின்றி பல அடுக்கு கார் பார்க்கிங், கொண்டு வரப் பட்டது. நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டன.

    மழைநீர் வடிகால் பணிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக செயல்படுத்தப்பட்டன.

    வில்லிவாக்கம் ஏரியில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து அங்கு மழைநீர் சேமித்து தற்போது உயர் மட்ட கண்ணாடி மேம்பாலமும் அமைக்கப்பட்டது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான நவீன பூங்காவும் சாந்தோமில் உருவாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டன. இப்படி பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தது.

    இப்படி பல்வேறு பணிகள் நடந்த நிலையில் இப்போது ஒரு சில பணிகள்தான் முடிவடையாமல் இறுதி கட்டத்தில் உள்ளது.

    அதில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் பின்புறம் கட்டப்பட்டு வரும் பசுமை கட்டிடம் பணிகள் இப்போது வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

    முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்ப சோலார் வசதிகளுடன் உருவாக்கப்ப டும் இந்த பசுமை கட்டிடத்தின் பணிகளும் இன்னும் 2 மாதத்தில் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும்.

    அதேபோல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் இறங்கும் இடத்தில் 'லிப்ட்' அமைக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளும் அடுத்த மாதத்தில் முடிந்துவிடும்.

    இதேபோல் மாம்பலம் கால்வாய் தூர்வாரப்பட்டு அதை அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட உள்ளது.

    இதுபற்றி 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட உயர் அதிகாரி கூறுகையில், "வருகிற ஜூன் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிவுக்கு வருவதால் அதற்குள் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னையை போன்று இந்தியா முழுவதும் 100 நகரங்களில் ஜூன் மாதத்துக்குள் இந்த திட்டம் நிறைவு பெறுகிறது.

    நகரங்களை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் நடைபெற்றதில் சென்னைக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை உள்ளிட்ட 22 நகரங்களிலும் இந்த திட்டப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இங்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்" என்றார்.

    • திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • திருச்சி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திருச்சி :

    மத்திய அரசு நகரங்களை மேம்படுத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ல் அறிமுகம் செய்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 11 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.

    மத்திய, மாநில அரசுகளின் சரி பாதி பங்களிப்புடன் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தார்.

    இந்த நிலையில் விசாரணை அனைத்து முடிவடைந்து டேவிதார் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 200 பக்க விசாரணை அறிக்கையை வழங்கி உள்ளார். இதில் திருச்சி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த மாநகராட்சியை பொருத்தமட்டில் சத்திரம் பஸ் நிலையம் ரூ.18 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. தில்லை நகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டது. உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. மேற்கண்ட பணிகள் உட்பட ரூ.261 கோடி பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதில் பல திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் இன்று தெரிவித்தார். இந்த ஒரு நபர் விசாரணை அறிக்கை முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே நேற்று இரவு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வைத்தியநாதன், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நிலையை ஆய்வு செய்தார். மேலும் முந்தைய ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாகவும் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    மதுரையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்னும் 18 மாதங்களில் மதுரை நகரம் ‘சிட்னி’யாக மாறும் என்று கூறினார். #SmartCity #MaduraiSmartCity #ministersellurraju

    மதுரை:

    மதுரையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் அம்மா மதுரை நகரை சர்வதேச நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

    அனைத்து தரப்பு மக்களும் நலமுடன் வாழ தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரை போல் மதுரையை சர்வதேச நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினேன். இதை சிலர் ஏளனமாக பேசினார்கள். சமூக வலைதளங்ககளில் கொச்சை கருத்துக்களும், கேலி கிண்டல்களும் செய்யப்பட்டன.

    ஆனால் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் இடம் பெற்று அதற்குரிய வகையில் பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்பட்டு மதுரை நகரம் நவீனமயமாக்கப்பட உள்ளது.

    இன்னும் 18 மாதங்களில் இந்த திட்டப்பணிகள் முடிவடையும். இது நிறைவு பெற்றபின் நான் கூறியது போல் மதுரை நகரம் சிட்னியாக மாறும். எனவே மக்கள் நலம் பேணும் இந்த அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் உரிமைகளை பேணும் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். மறைந்த முதல்வர் அம்மா வழியில் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    முதல்வர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளித்து அனைத்து திட்டங்களையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

    முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து இந்த ஆட்சியை நடத்தி வருகிறார்கள். துணை முதல்வர் மதுரையை தனது தாய் மண் போல் நேசிக்கிறார். தேனியை விட மதுரையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முனைப்புடன் பணியாற்றி வருகிறார்.

    வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வருகிறார். தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எய்ம்ஸ் ரூ. 1,300 கோடியில் தோப்பூரில் அமைய உள்ளது. இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

    மதுரை மண்ணுக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது. இதை செயல்படுத்தி மக்கள் நலன் காக்கும் இந்த அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார். #SmartCity #MaduraiSmartCity #ministersellurraju

    ×