search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
    X

    தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

    • மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார்.
    • ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு கட்டிட அரங்கம் உள்பட பல்வேறு பணிகள் ரூ .140 கோடி மதிப்பில் கட்டி முடிவடைந்துள்ளன.

    இந்தத் திட்ட பணிகளை வருகிற 27-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தநிலையில் இன்று விழா நடைபெறும் இடத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார். அன்று நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதற்கு மறுநாள் 27ஆம் தேதி நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்வற்கான விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மதியம் தஞ்சாவூருக்கு வருகிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலைய வளாகம், பல்நோக்கு மையக் கட்டிட அரங்கம், பழைய திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என பெயர் சூட்டுதல் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்த பல்வேறு திட்ட பணிகளை மாலை 5 மணி அளவில் திறந்து வைக்கிறார். மொத்தம் ரூ.140 கோடி மதிப்பில் முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்றைய தினம் அணைக்கு 4500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய தண்ணீரை பெற முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.

    மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது. 24 மாதத்திற்குள் பணிகள் முடிவடைய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×