search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு? - விசாரணை கமிஷன் அறிக்கையால் பரபரப்பு
    X

    திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு? - விசாரணை கமிஷன் அறிக்கையால் பரபரப்பு

    • திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • திருச்சி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திருச்சி :

    மத்திய அரசு நகரங்களை மேம்படுத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ல் அறிமுகம் செய்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 11 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.

    மத்திய, மாநில அரசுகளின் சரி பாதி பங்களிப்புடன் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தார்.

    இந்த நிலையில் விசாரணை அனைத்து முடிவடைந்து டேவிதார் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 200 பக்க விசாரணை அறிக்கையை வழங்கி உள்ளார். இதில் திருச்சி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த மாநகராட்சியை பொருத்தமட்டில் சத்திரம் பஸ் நிலையம் ரூ.18 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. தில்லை நகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டது. உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. மேற்கண்ட பணிகள் உட்பட ரூ.261 கோடி பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதில் பல திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் இன்று தெரிவித்தார். இந்த ஒரு நபர் விசாரணை அறிக்கை முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே நேற்று இரவு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வைத்தியநாதன், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நிலையை ஆய்வு செய்தார். மேலும் முந்தைய ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாகவும் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×