செய்திகள்
3-ம் வகுப்பு படிக்கும் மாணவி கீர்த்தனாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை கற்பகவள்ளி.

ஒரு மாணவி, ஒரு ஆசிரியையுடன் செயல்படும் அரசுப்பள்ளி

Published On 2017-06-23 08:08 GMT   |   Update On 2017-06-23 08:08 GMT
கோவை அருகே செயல்பட்டுவரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் தற்போது 2017-18-ம் கல்வியாண்டில் கீர்த்தனா என்ற ஒரே ஒரு மாணவி மட்டுமே 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கீர்த்தனாவுக்கு கற்பகவள்ளி என்ற ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்.
கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா அருகே உள்ள சின்னக்கல்லார் பகுதியில் 1948-ம் ஆண்டு அரசினர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி தொடங்கப்பட்டது.

ஆரம்ப கால கட்டத்தில் இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். நாளடைவில் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது.

5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் தற்போது 2017-18-ம் கல்வியாண்டில் கீர்த்தனா என்ற ஒரே ஒரு மாணவி மட்டுமே 3-ம் வகுப்பு படித்து வருகிறார். 1 ,2, 4, 5-ம் வகுப்புகளில் மாணவர்களே இல்லை. கீர்த்தனாவுக்கு கற்பகவள்ளி என்ற ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பாடம் நடத்தி வருகிறார். ஒரு மாணவிக்காக இந்த பள்ளியில் சத்துணவு மையமும் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கல்வி கற்றுத்தரப்படுவதாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த பலனும் இல்லை. நடப்பு கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. பல முயற்சிகள் மேற்கொண்டும் சின்னக்கல்லார் அரசு பள்ளியில் மாணவர்கள் சேராததால் பள்ளி மூடப்படும் நிலையில் உள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது,

சின்னக்கல்லார் பகுதியில் வசித்து வந்த ஏராளமானோர் சமவெளி பகுதிக்கு சென்று குடியேறி விட்டனர். தற்போது இந்த பகுதியில் 34 வீடுகள் மட்டுமே உள்ளது.

இங்கு உள்ள மாணவர்கள் கூட வால்பாறையில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையை இந்த பகுதியில் உள்ள மக்களிடம் சொல்லி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News