செய்திகள்
சுகேஷ்

கோவை கோர்ட்டில் இடைத்தரகர் சுகேஷ் இன்று மீண்டும் ஆஜர்

Published On 2017-06-22 06:41 GMT   |   Update On 2017-06-22 06:41 GMT
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இன்று கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை:

இரட்டை சிலை சின்னத்தை பெற லஞ்சம் பெற்ற புகாரில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் மீது தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.

கோவை கணபதியில் சமையலறை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்த ராஜவேலு என்பவரிடம் கடந்த 2010-ம் ஆண்டு இடைத்தரகர் சுகேஷ் ரூ.2½ லட்சம் மோசடி செய்தார். இதுகுறித்து ராஜவேலு கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

கர்நாடக முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய சுகேஷ் ராஜவேலுக்கு டெண்டர் எடுத்து தருவதாக மோசடி செய்திருப்பதை உறுதி செய்த போலீசார் சுகேஷ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சந்திர சேகர் ஆகிய இருவர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சரிவர ஆஜராகவில்லை. இதனால் சுகேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த ஜனவரி 9-ந்தேதி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதற்கிடையே சுகேஷ் இரட்டை சிலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். எனவே சுகேஷ் மீதான பிடிவாரண்டு உத்தரவு ஆவணங்களை டெல்லி திகார் சிறைக்கு கோவை சைபர் கிரைம் போலீசார் அனுப்பினர். இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி டெல்லி போலீசார் கைது செய்து பாதுகாப்புடன் சுகேசை கோவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சுகேஷ் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ் திரேட்டு ராஜ்குமார் இந்த வழக்கை 22-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இதையடுத்து சுகேஷ் மீண்டும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணைக்காக சுகேசை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோவை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சுகேசை கோவை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து சுகேஷை டெல்லி போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எர்ணா குளம் அழைத்து சென்றனர். அங்கிருந்து ரெயில் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
Tags:    

Similar News