செய்திகள்

மாணவனை வராண்டாவில் அமர வைத்த விவகாரம்: 3 ஆசிரியைகள் வேறு பள்ளிக்கு மாற்றம்

Published On 2017-06-17 06:29 GMT   |   Update On 2017-06-17 06:29 GMT
மாணவனை ஆசிரியை வகுப்பறைக்குள் அமர வைக்காமல் வராண்டாவில் அமர வைத்த விவகாரம் தொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை அடிப்படையில் 3 ஆசிரியைகள் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த அகர மேல்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு படிக்கும் அன்பு என்ற மாணவனை ஆசிரியை வகுப்பறைக்குள் அமர வைக்காமல் வராண்டாவில் அமர வைத்திருந்தார்.

இதுபற்றி அறிந்த அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது ஆசிரியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். பெற்றோர்கள் கூறும் போது, தலைமை ஆசிரியை, ஆசிரியைகளுக்குள் ஏற்படும் தகராறு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதன் அடிப்படையில் 3 ஆசிரியைகள் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியை உமாமகேஷ்வரி குத்தம்பாக்கத்திற்கும், மகாலட்சுமி நசரத்பேட்டைக்கும், ராஜேஸ்வரி கம்மார் பாளையத்திற்கும் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News