search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியைகள்"

    கேரளாவில் ஆசிரியைகள் கண்டிப்பாக சேலை அணிந்துதான் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #KeralaPrivateSchools
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் பணிக்கு சேலை அணிந்தே செல்கிறார்கள்.

    காலையில் இருந்து மாலை வரை சேலை அணிந்து பணி செய்வது அசவுகரியமாக இருப்பதாக ஆசிரியைகள் பலரும் புகார் செய்ததை தொடர்ந்து கேரள அரசு கடந்த 2008-ம் ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

    அதில், ஆசிரியைகள் சுடிதார் அல்லது சல்வார் அணிந்து பணிக்கு செல்லலாம் என கூறப்பட்டிருந்தது. 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி இது தொடர்பாக அரசு உத்தரவும் வெளியானது.

    ஆனால் கேரளாவில் உள்ள பல தனியார் பள்ளிகள், ஆசிரியைகள் சேலை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும் என கூறி உள்ளது. சேலை அணிந்து வகுப்புகளுக்கு சென்றால்தான் மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் இடையேயான வித்தியாசம் தெரிய வரும்.

    எனவே ஆசிரியைகள் கண்டிப்பாக சேலை அணிந்துதான் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூறி உள்ளன.

    இந்த நிலையில் ஆசிரியைகளுக்கு சேலை அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் மீண்டும் கிளம்பி உள்ளது. இதுபற்றி கேரள பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அரிகிருஷ்ணன் கூறியதாவது:-

    அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மட்டுமே ஆசிரியைகள் பாரம்பரிய உடையான சேலையை அணிந்து வர வேண்டுமென்று கூறுகிறது. இதுபற்றி எங்களுக்கு புகார்கள் வந்தன. நாங்கள் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    ஆசிரியைகள் புகார் கூறினால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் உள்ள அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாய் பிலிப் கூறும்போது, குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வரச்சொல்வது அந்த பள்ளிகளின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும்.

    ஆனாலும் கேரளாவில் உள்ள சில தனியார் பள்ளிகள் சுடிதார், சல்வார் அணிந்து வர ஆசிரியைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது என்றார்.

    இதுபற்றி தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும்போது, ஆசிரியைகள் சேலை அணிந்து மிடுக்காக வரும்போது மாணவர்கள் மத்தியில் மரியாதை இருக்கும். குறிப்பாக பள்ளி வளாகத்தில் மாணவிகளையும், ஆசிரியைகளையும் வேறுபடுத்தி காட்டும். எனவேதான் ஆசிரியைகள் சேலை அணிந்து பணிக்கு வருவது சிறப்பாக இருக்குமென கருதுகிறோம் என்றார்.  #KeralaPrivateSchools
    ×