செய்திகள்
நளினி

வேலூர் ஜெயிலில் 5-வது நாளாக உண்ணாவிரதம் - நளினியின் உடல் நிலை பாதிப்பு

Published On 2017-06-17 05:50 GMT   |   Update On 2017-06-17 05:50 GMT
தன்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று மனு அளித்த நளினி, வேலூர் ஜெயிலில் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நளினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தன்னை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றக் கோரி, கடந்த 13-ந் தேதியில் இருந்து ஜெயிலில் நளினி உண்ணாவிரதம் இருக்கிறார்.

இது குறித்து நளினியின் வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினிக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஜெயில் அலுவலர்கள் மற்றும் வார்டன்கள் மூலம் நளினி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்.

இதனால் தன்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த 12-ந் தேதி கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் நளினி மனு அளித்தார்.

இந்த மனுவை உடனடியாக பெற்று கொள்ளவில்லை. இதையடுத்து கடந்த 13-ந் தேதி நளினி உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். 14-ந் தேதி நளினியின் மனுவை ஜெயில் கண்காணிப்பாளர் பெற்றுக் கொண்டார்.

அந்த மனு குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தை தொடர்கிறார். 5-வது நாளாக இன்றும் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி.யிடம் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, நளினி உண்ணாவிரதம் இருக்கவில்லை எனவும், அவர் இளநீர், பிஸ்கெட், பழச்சாறு சாப்பிட்டதாகவும் கூறியது முற்றிலும் பொய்யான தகவல்.

ஜெயிலில் நளினி ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்ததை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மறைத்துள்ளார். அதேபோல் இந்த முறையும் உண்ணாவிரதம் இருப்பதை மறைக்க பார்க்கிறார்.

உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.



ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு ஜெயிலில் பாதுகாப்பு இருந்தது. தற்போது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.



தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் தலையிட்டு நளினியை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா சட்டமன்றத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுவிப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றினார். இதனை தற்போதைய முதல்-அமைச்சர் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நளினியின் விடுதலை தொடர்பாக சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சர்வதேச நாடுகளின் தலைவர்களை நாட உள்ளோம்.

நளினியின் உடல் நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரால் யாரிடமும் பேச முடியவில்லை.

புழல் ஜெயிலுக்கு நளினியை மாற்றுவது குறித்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை ஐகோர்ட்டில் முறையிடுவோம்.

புழல் ஜெயிலுக்கு நளினி மாற்றப்பட்ட பிறகு அவரது கணவர் முருகனையும் வேலூர் ஜெயிலில் இருந்து புழலுக்கு மாற்ற மனு தாக்கல் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News